15 வயது சிறுமிக்கு பிறந்த குழந்தையை அவரிடமே ஒப்படைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

இளைஞருக்கும், 15 வயது சிறுமிக்கும் பிறந்த குழந்தையை அந்தச் சிறுமியிடமே ஒப்படைக்க, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

இளைஞருக்கும், 15 வயது சிறுமிக்கும் பிறந்த குழந்தையை அந்தச் சிறுமியிடமே ஒப்படைக்க, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
     தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் பகுதியில் 25 வயது இளைஞரும், 15 வயது சிறுமியும் காதலித்தனர். பெற்றோர் எதிர்ப்பு காரணமாக இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்தனர். பின்னர், அந்தச் சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து, இருவரையும் அவர்களின் பெற்றோர் கண்டுபிடித்து தங்கள் வீடுகளுக்கு அழைத்துச் சென்றனர்.
     இந்நிலையில், சிறுமியின் பெற்றோர் பிறந்து 2 மாதங்களேயான ஆண் குழந்தையை காப்பகத்தில் ஒப்படைத்து, அந்த குழந்தைக்கும் தங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என காப்பக நிர்வாகிகளிடம் எழுதிக் கொடுத்தனர். அந்த குழந்தை தத்து கொடுப்பதற்கு தயாராக இருப்பதாக, காப்பகம் சார்பில் விளம்பரமும் செய்யப்பட்டது. இந்நிலையில், அந்த இளைஞரும், சிறுமியும் மீண்டும் வீட்டை விட்டு வெளியேறினர்.     இளைஞரை கண்டுபிடித்து ஆஜர்படுத்தக் கோரி அவரது தந்தை பரமசிவமும், சிறுமியைக் கண்டுபிடித்து ஆஜர்படுத்தக் கோரி அவரது தாய் மீனாவும் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தனர்.
    இந்த இரு மனுக்கள் நீதிபதிகள் எஸ். விமலா, டி.கிருஷ்ணவள்ளி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. 
அப்போது அரசு வழக்குரைஞர் ஆஜராகி, சம்பந்தப்பட்ட இளைஞரை சிறுவர்களை பாலியல் துன்புறுத்தலில் இருந்து பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் கைது செய்து போலீஸார் சிறையில் அடைத்ததாகவும், அந்தச் சிறுமியை மீட்டதாகவும் தெரிவித்தார்.
     இந்நிலையில், காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்ட குழந்தையை தன்னிடம் ஒப்படைக்கக் கோரி, மீட்கப்பட்ட சிறுமி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அவர் மைனர் என்பதால், அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. எனவே, கைது செய்யப்பட்ட இளைஞர் சார்பில் குழந்தையை காப்பகத்திலிருந்து மீட்டு மனைவியிடம் (சிறுமி) ஒப்படைக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
    இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, அவரது பெற்றோரும் குழந்தையை தாங்களே வளர்ப்பதாக நீதிமன்றத்தில் உறுதியளித்தனர். இதையடுத்து, சிறையில் அடைக்கப்பட்ட இளைஞர், சிறுமி ஆகிய இருவரின் பெற்றோர் மற்றும் குழந்தைகள் நலக்குழு அதிகாரிகளை நேரில் அழைத்து, நீதிபதிகள் விசாரணை நடத்தினர். குழந்தையும் அழைத்து வரப்பட்டது.
  குழந்தையை காப்பகத்தில் ஒப்படைக்கும்போது, ஒப்பந்தப் பத்திரம் எழுதி கொடுக்கப்பட்டுள்ளது. அந்தப் பத்திரம் எழுதிக் கொடுத்து 2 மாதத்தில் குழந்தையை சட்டப்படி மீண்டும் பெற முடியும். 
2 மாதம் கடந்த நிலையில் சட்டப்படி குழந்தையை திரும்பப் பெறமுடியாது. இதனால், அந்த ஒப்பந்தப் பத்திரத்தை ரத்து செய்து, குழந்தையை தன்னிடம் ஒப்படைக்கக் கோரி
சிறுமி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு குழந்தைகள் நலக்குழு அதிகாரிகள் ஆட்சேபம் தெரிவித்தனர். 
    இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், குழந்தையை காப்பகத்தில் ஒப்படைக்கும் போது சிறுமியின் பெற்றோர் தரப்பில் வழங்கப்பட்ட ஒப்பந்தப் பத்திரத்தை ரத்து செய்து, குழந்தையை சிறுமியிடம் ஒப்படைக்க உத்தரவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com