கப்பலூர் சுங்கச்சாவடியில் 50 சதவீத கட்டண வசூலே தொடர வேண்டும்: மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரையை அடுத்த கப்பலூர் சுங்கச்சாவடி பராமரிப்பில் உள்ள தேசிய நெடுஞ்சாலையின் தற்போதைய நிலை குறித்து அறிக்கை தாக்கல்

மதுரையை அடுத்த கப்பலூர் சுங்கச்சாவடி பராமரிப்பில் உள்ள தேசிய நெடுஞ்சாலையின் தற்போதைய நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும், அதுவரை 50 சதவீத கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்ற உத்தரவு தொடரும் எனவும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
 மதுரை-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் மதுரை மாவட்ட எல்லையில் இருந்து கப்பலூர் சுங்கச்சாவடி வரை 50 கி.மீ. சாலை மிகவும் சேதமடைந்துள்ளது.  குண்டும் குழியுமாக உள்ள இச்சாலையால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இரவு நேரங்களில்  விபத்துகளும் அதிகளவில் நடக்கின்றன.
 எனவே, இச்சாலையை விரைந்து சீரமைக்க கோரி, விருதுநகர் மணிமாறன், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் மனு அளித்தார். இதற்கு, ஒப்பந்தம் விடுவதில் ஏற்பட்ட தாமதத்தால் சாலையை சீரமைக்க தாமதமாகியுள்ளது எனவும், விரைவில் சாலை சீரமைக்கப்படும் எனவும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
 இருப்பினும் சாலை  சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதையடுத்து, சாலையை சீரமைக்கும் வரை கப்பலூர் சுங்கச்சாவடியை தாற்காலிகமாக மூடுவதற்கு உத்தரவிட வேண்டும் எனக்கோரி, மணிமாறன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார். 
 இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்றம் உத்தரவிட்டபடி, சாலையை சீரமைக்கும் வரை 50 சதவீத சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்ய வழக்குரைஞர் ஆணையரை  நியமித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
 இந்நிலையில், நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர் அகமது ஆகியோர் அடங்கிய அமர்வு முன், இந்த வழக்கு திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வழக்குரைஞர் ஆணையர் தாக்கல் செய்த அறிக்கையில், "கப்பலூர் சுங்கச்சாவடியில் நீதிமன்ற உத்தரவுப்படி 50 சதவீத கட்டணம் தான் வசூலிக்கப்படுகிறது. ஆனால், சாலையை முழுமையாகச் சீரமைக்காமல், சேதமடைந்த பகுதிகளை மட்டும் சீரமைத்துள்ளனர்' என குறிப்பிடப்பட்டிருந்தது.
 இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், சாலையின் தற்போதைய நிலை குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறையின் திட்ட இயக்குநர் பதில் மனு தாக்கல் செய்யவும், அதுவரை கப்பலூர் சுங்கச்சாவடியில் 50 சதவீத கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்ற உத்தரவு தொடரும் எனவும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் ஜூன் 13 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com