தாய் போல பண்படுத்தி பட்டம் தரும் பல்கலைக்கழகம் மீது பழிசுமத்தாதீர்! விருது வழங்கும் விழாவில் துணைவேந்தர் உருக்கம்

இளைஞர்களை தாய்போல் பண்படுத்தி பட்டம் தரும் பல்கலைக்கழகத்தின் மீது பழிசுமத்தாதீர்கள் என மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் பி.பி.செல்லத்துரை உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.

இளைஞர்களை தாய்போல் பண்படுத்தி பட்டம் தரும் பல்கலைக்கழகத்தின் மீது பழிசுமத்தாதீர்கள் என மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் பி.பி.செல்லத்துரை உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.
    மதுரையில் இலக்கிய இணையர் பேராசிரியர் ரா.மோகன்-நிர்மலா மோகன் அறக்கட்டளை சார்பில் வியாழக்கிழமை நடைபெற்ற இலக்கிய விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் நூல்கள் வெளியீட்டு விழாவுக்கு தலைமை வகித்து அவர் பேசியதாவது: 
  இளைஞர்களை பண்படுத்தி பட்டம் தரும் தாயாக பல்கலைக்கழம் உள்ளது. ஆனால், அந்தத் தாயை களங்கப்படுத்துவது போல நடந்து கொள்வதை மன்னிக்கமுடியாது. எங்கோ நடந்த நிகழ்வுக்காக பல்கலைக் கழகத்தின் மீது பழி சுமத்தி களங்கப்படுத்தி காயப்படுத்துவது சரியல்ல.
 இதுபோன்ற செயல்கள் தமிழர்கள் அனைவருக்குமே தலைக் குனிவை ஏற்படுத்தும்.  எழுத்தாளர்கள் சமூகத்தின் தலையெழுத்தை மாற்றும் சக்தி உடையவர்கள். பிரஞ்சுப் புரட்சியால் அனைவருக்கும் சமத்துவம், சமஉரிமை, சுகோதரத்துவம் ஆகியவை உலக அளவில் சாத்தியமானது. சிறந்த எழுத்தாளர்களுக்கு விருது வழங்குவது பாராட்டுக்குரியது என்றார்.
  நிகழ்ச்சியில் உலகத் திருக்குறள் பேரவை கா.கருப்பையா முன்னிலை வகித்தார்.  நிர்மலாமோகன் எழுதிய உரைவேந்தர் ஒளவை துரைசாமி மற்றும் ரா.மோகனின் கவிதை வெளியினிலே உள்ளிட்ட 3 நூல்களை தியாகராஜர் கல்லூரி செயலர் ஹரிதியாகராஜன் வெளியிட்டார். நூல்களை பொறியாளர் ஜ.சுரேஷ், சி.இ.ஓ.ஏ. கல்விக்குழும தலைவர் மை.ராசாகிளைமாக்ஸ் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். 
  வாழ்நாள் சாதனையாளர் விருதை சாந்தகுமாரி சிவகடாட்சத்துக்கும், சிறந்த இலக்கிய இதழ் விருதை அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணனுக்கும் துணைவேந்தர் பி.பி.செல்லத்துரை வழங்கினார். 
நூல்களை அறிமுகப்படுத்தி டாக்டர் ஒளவை மெய்கண்டான், அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன், பதிப்பாளர் வானதி ராமநாதன்,பேராசிரியர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் பேசினர். கவிஞர் ரா.ரவி வரவேற்றார். பேராசிரியர் ரா.மோகன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com