மாநகராட்சிப் பள்ளி சத்துணவுக் கூடத்தில் விறகு அடுப்பை தவிர்க்க ஆணையர் அறிவுரை

மதுரை மாநகராட்சிப் பள்ளிகளில் உள்ள சத்துணவுக் கூடங்களில் விறகு அடுப்பில் சமைப்பதைத் தவிர்த்து எரிவாயு பயன்படுத்துமாறு ஆணையர் அனீஷ்சேகர் அறிவுறுத்தினார்.


மதுரை மாநகராட்சிப் பள்ளிகளில் உள்ள சத்துணவுக் கூடங்களில் விறகு அடுப்பில் சமைப்பதைத் தவிர்த்து எரிவாயு பயன்படுத்துமாறு ஆணையர் அனீஷ்சேகர் அறிவுறுத்தினார்.
மதுரை மாநகராட்சி ஆணையர் அனீஷ்சேகர் வியாழக்கிழமை காலையில் மாநகராட்சிப் பள்ளிகளில் திடீர் ஆய்வை மேற்கொண்டார். சிம்மக்கல் பகுதியில் உள்ள வெங்கடசாமி அக்ரஹாரம் கஸ்தூரிபாய் காந்தி பெண்கள் தொடக்கப்பள்ளி, ஆதிமூலம் பிள்ளை சந்தில் உள்ள கஸ்தூரிபாய் காந்தி பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் ஆய்வு மேற்கொண்டார்.
தொடக்கப்பள்ளி வளாகத்தில் பயன்பாடின்றி கிடந்த அங்கன்வாடி கட்டடங்களை இடித்துவிட்டு கூடுதல் வகுப்பறைகள் கட்ட நடவடிக்கை எடுக்க கல்வித்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். தொடக்கப் பள்ளி நுழைவு வாயிலில் பழுதான கதவுகளை மாற்றி அமைக்கவும் அறிவுறுத்தினார்.
மேல்நிலைப் பள்ளி மாணவியருடன் கலந்துரையாடிய ஆணையர், அவர்களிடம் பிளாஸ்டிக் ஒழிப்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் செயல்படவும் வலியுறுத்தினார். அப்போது சத்துணவுக் கூடத்தில் இருந்து புகை வருவதை கண்ட ஆணையர், அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். சத்துணவுக் கூட்டத்தில் விறகு அடுப்பில் சமையல் செய்வதைக் கண்ட ஆணையர் இனிமேல் புகை வரும் வகையில் விறகு அடுப்பைப் பயன்படுத்தக்கூடாது என சமையலருக்கு அறிவுரை வழங்கியதுடன், எரிவாயுவை பயன்படுத்தியே சமையல் செய்யவும் உத்தரவிட்டார்.
பழங்காநத்தம் சோமசுந்தர பாரதியார் மேல்நிலைப் பள்ளிக்குச் சென்ற ஆணையர், அங்கு பழைய கட்டடங்களை இடிக்கவும், புதிய கட்டடங்கள் கட்டவும் பொறியாளர்கள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மேலும், அங்கிருந்த மாணவி பிளாஸ்டிக் மதிய உணவை கொண்டுவந்திருந்ததை கண்ட ஆணையர், இனிமேல் துணிப்பை அல்லது பாத்திரங்களில் மட்டுமே உணவுகளை கொண்டுவரவேண்டும் என அறிவுரை வழங்கினார். மேலும், மாணவ, மாணவியர் தத்தமது வீடுகளில் பிளாஸ்டிக் இல்லாத நிலையை ஏற்படுத்தவேண்டும் என்றும் கூறினார். ஆய்வின்போது மாநகராட்சி மண்டலம் 4 (தெற்கு) உதவி ஆணையர் பிரேம்குமார், செயற்பொறியாளர் சேகர்,
செயற்பொறியாளர் ஆரோக்கியசேவியர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com