தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்: சமூக ஆர்வலர் ஹென்றி திஃபேன்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் நீதி கிடைக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும் என்று மக்கள் கண்காணிப்பகம் அமைப்பின் தலைவர் ஹென்றி திஃபேன் கூறினார்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் நீதி கிடைக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும் என்று மக்கள் கண்காணிப்பகம் அமைப்பின் தலைவர் ஹென்றி திஃபேன் கூறினார்.
 தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி பல்வேறு கிராமத்தினர் ஒன்றிணைந்து போராட்டங்களை நடத்தி வந்தனர். போராட்டத்தின் நூறாவது நாளின்போது அனைவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணி சென்றனர். இதில் கலவரம் ஏற்பட்டதையடுத்து போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 13 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இச்சம்பவத்தை எதிர்த்து வழக்குரைஞர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்தனர்.
 இந்த வழக்குகளின் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சி.டி.செல்வம் - ஏ.எம்.பஷீர் அகமது அடங்கிய அமர்வு, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐ விசாரிக்க திங்கள்கிழமை உத்தரவிட்டது. 
 இதுகுறித்து மனுதாரரும்,  மக்கள் கண்காணிப்பகம் அமைப்பின் தலைவருமான ஹென்றி திஃபேன் மதுரையில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது:
 துப்பாக்கிச் சூடு சம்பவத்தை சிபிஐ விசாரிக்கும் என நீதிபதிகள் அளித்துள்ள தீர்ப்பு மிகவும் வரவேற்கத்தக்கது. இச்சம்பவத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்த அனைவருக்குமான வெற்றி. 
இந்த சம்பவத்தை நீதிமன்றம் தெளிவான முறையில் அனுகியுள்ளது. பிரச்னையின் ஆழத்தை வெளிக்கொண்டு வரும் வகையில், இது தொடர்பாக பொதுமக்கள் அளித்தப் புகார்களையும் வழக்குகளாகப் பதிவு செய்து விசாரிக்க சிபிஐ-க்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், நான்கு மாதத்துக்குள் விசாரணை அறிக்கையையும் சிபிஐ தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர். துப்பாக்கிச்சூட்டுக்கு காரணமான போலீஸாருக்கு தண்டனை கிடைக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com