திருப்பரங்குன்றத்தில் தீயணைப்பு நிலையம் அமைக்கப்படுமா?

கோயில், கல்லூரி, தொழிற்கூடங்கள் நிறைந்த பகுதியும், வளர்ந்து வரும் சுற்றுலாதலமுமான

கோயில், கல்லூரி, தொழிற்கூடங்கள் நிறைந்த பகுதியும், வளர்ந்து வரும் சுற்றுலாதலமுமான திருப்பரங்குன்றத்தில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 திருப்பரங்குன்றத்தில் சுமார் 2 லட்சம் பொதுமக்களும், இவ்வூரை சுற்றியுள்ள 12 கிராமங்களில் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். முருகப் பெருமானின் முதற்படை வீடு அமைந்துள்ள இப்பகுதி மதுரைக்கு அடுத்தபடியாக  சுற்றுலாப் பயணிகள் அதிகளவு வந்து செல்லும் சுற்றுலாத்தலமாக விளங்குகிறது.  
மேலும் திருப்பரங்குன்றம் பகுதியைச் சுற்றிலும் பொறியியல் கல்லூரி, கலை கல்லூரிகள், அரசு இசைக்கல்லூரி,மத்திய அரசின் கேந்திர வித்யாலயா பள்ளி, அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்களும், 50 க்கும் மேற்பட்ட  பஞ்சாலைகளும், தனியார் தொழிற்கூடங்களும், உரத் தொழிற்சாலையும், 6 பெட்ரோல் பங்குகளும், 10 க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகளும் உள்ளன.
 மேலும் மதுரை மாவட்டத்திலேயே 150 க்கும் அதிகமான திருமண மண்டபங்களும் திருப்பரங்குன்றத்தில் தான் உள்ளன. இங்கு நாள் ஒன்றுக்கு பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் என 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வந்து செல்கின்றனர். இதுதவிர பங்குனித் திருவிழா, தெப்பத் திருவிழா, கார்த்திகை தீபத் திருவிழா, திருக்கல்யாண விழா ஆகிய விழாக்களில் திருப்பரங்குன்றம் நகரில் சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் குவிகின்றனர்.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த திருப்பரங்குன்றத்தில் தீயணைப்பு நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட நாளைய கோரிக்கையாகும்.  இப்பகுதியில் உள்ள பஞ்சாலைகளில் அடிக்கடி தீவிபத்து ஏற்பட்டு தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள்ளாக பஞ்சுகள் முழுவது எரிந்து சாம்பலாகி விடுகின்றன. இதேபோல இங்குள்ள சரவணப்பொய்கை, தென்கால் கண்மாய், ஆரியன்குளம், பனாங்குளம் உள்ளிட்ட கண்மாய்களில் தவறி விழுந்து விடுகின்றனர். அவர்களை மீட்க மதுரையில் இருந்து தீயணைப்பு வீரர்கள் போக்குவரத்து நெரிசலைக் கடந்து சுமார் 13 கிலோமீட்டர் தூரம் வரவேண்டி உள்ளது. இதனால் சரவணப் பொய்கையில் கடந்த ஆண்டு மட்டும் 5 க்கும் மேற்பட்டோர் விழுந்து இறந்துள்ளனர். 
மேலும் இப்பகுதியில் கடந்த 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை சுமார் 95 தீவிபத்துகள் ஏற்பட்டுள்ளன. எனவே இப்பகுதியில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என  பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து இப்பகுதியை சேர்ந்த முருகேசன் கூறியது:  திருப்பரங்குன்றத்தில் விபத்து என்றால் அனுப்பானடி, மதுரை, திருமங்கலத்திலிருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவேண்டியுள்ளது. அவர்கள் அங்கிருந்து வருவதற்குள்ளாக அதிகளவில் சேதம் ஏற்பட்டு விடுகிறது. கடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது அதிமுக அளித்த தேர்தல் வாக்குறுதியின் படி, திருப்பரங்குன்றத்தில் தீயணைப்பு நிலையம் அமைக்கும் பணி நடைபெற்றது. இந்நிலையில் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த ஏ.கே.போஸ் மறைவுக்குப் பின் அப்பணி நின்றுவிட்டது. எனவே  போர்க்கால அடிப்படையில் இப்பகுதியில் தீயணைப்பு நிலையம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com