பக்தி இலக்கியங்களில் ஒளவை, ஸ்ரீஆண்டாள், காரைக்கால் அம்மையாரை தவிர்க்க முடியாது: கம்பன் கழக விழாவில் பாரதி பாஸ்கர் பேச்சு

தமிழ் பக்தி இலக்கியங்களில் ஒளவை, ஸ்ரீஆண்டாள், காரைக்கால் அம்மையாரை தவிர்க்க முடியாது

தமிழ் பக்தி இலக்கியங்களில் ஒளவை, ஸ்ரீஆண்டாள், காரைக்கால் அம்மையாரை தவிர்க்க முடியாது என்று கம்பன் கழக விழாவில் பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர்  பேசினார்.
மதுரை கம்பன் கழகம் சார்பில் 9-ஆம் ஆண்டு மகாகவி பாரதி- ஒளவை விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஆண்டாள்புரம் அக்ரினி வளாகத்தில் நடைபெற்ற உரையரங்கத்துத்துக்கு மதுரை கம்பன் கழக புரவலர் சங்கர சீத்தாராமன் தலைமை வகித்தார். இதில் பாரதி பாஸ்கர் பங்கேற்று ஒளவை முதல் ஆண்டாள் வரை என்ற தலைப்பில் பேசியது: 
 ஒளவை என்பது ஒருவர் மட்டும் அல்ல. மூன்று ஒளவைகள் இருந்துள்ளனர். மூவரும் வெவ்வேறு கால கட்டங்களில் வாழ்ந்தவர்கள். இதில் முதல் ஒளவைக்கு சரித்திரத்தில் நீங்கா இடம் உண்டு.  முதல் ஒளவை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர். அதற்கு அடுத்ததாக  தெய்வமாக போற்றப்படுபவர் ஸ்ரீ ஆண்டாள். 
இவர் 8-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். திருப்பாவை, திருவெம்பாவை போன்ற பக்தி இலக்கியங்களை படைத்தவர். இவர்கள் இருவருக்கும் அடுத்ததாக வருபவர் காரைக்கால் அம்மையார். இவரும் தெய்வமாக தொழப்படுகிறவர். இவர் 800 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர். மூன்று பெண் கவிகளில் ஸ்ரீஆண்டாள், காரைக்கால் அம்மையாருக்கு தனி ஆலயங்கள் உண்டு.
சங்க காலத்தில் ஒளவை 58 பாடல்கள் பாடியுள்ளார். அப்போதைய காலகட்டத்தில் இவ்வளவு பாடல்கள் பாடுவது எளிதல்ல. 
மேலும் ஒளவையாரின் வாழ்க்கை ஆனந்தமயமான வாழ்க்கை. 
நவீன போக்குவரத்து வாகனங்கள், செல்லிடப்பேசி உள்ளிட்டதொடர்பு சாதனங்கள், பாதுகாப்பு வசதிகள் கொண்ட தற்போதைய நாள்களில் கூட பெண்களை தனியாக அனுப்புவது மிக சவாலாக உள்ளது. ஆனால் போக்குவரத்து வசதியற்ற, சாலைகளே இல்லாத அடர் வனங்களின் வழியாக நினைத்த நாட்டுக்கு நினைத்த நேரத்தில் சென்று வந்தவர் ஒளவையார்.   
ஒளவைக்கு அடுத்ததாக பெண் கவிகளில் சிறப்பு படைத்தவர் காரைக்கால் அம்மையார். இயல்பாக அவரிடம் இறை சக்தியை உணர்ந்து அவரது கணவர், அவரை விட்டு நீங்கினார். இதனால் கணவருக்கு பயன்படாத உடல் தனக்கு தேவையில்லை என்று ஈசனை பூஜித்து பேய் உருவத்தை வேண்டிப் பெற்று  அதே உருவத்தோடு இறையுலகு சென்றவர்.
 ஸ்ரீ ஆண்டாள் இயற்றிய நாச்சியார் திருமொழி அளவியல் சந்தம் என்றழைக்கப்படுகிறது. இந்த சந்தத்தை இயற்ற கற்றறிந்தவர்களே சற்று நிலைதடுமாறும் போது, சிறு வயதில் அதை பிழையின்றி இயற்றியவர் ஸ்ரீ ஆண்டாள்.  இதனால் தான் இந்த மூன்று பெண் கவிகளும் சிறப்பு வாய்ந்தவர்களாக போற்றப்படுகின்றனர் என்றார். நிகழ்ச்சியில் பேராசிரியர் சாலமன் பாப்பையா உள்பட தமிழறிஞர்கள் பலர் பங்கேற்றனர்.
இதைத்தொடர்ந்து மகாகவி பாரதி விரும்பிய பெண் விடுதலை இன்றைக்கு என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. பட்டிமன்றத்துக்கு எஸ்.ராஜா நடுவராக இருந்து வழி நடத்தினார். 
இதில் மாது, தெய்வானை, கவிதா ஜவகர் ஒரு அணியாகவும், பேராசிரியை ரேவதி சுப்புலட்சுமி, அனுக்கிரஹா, எம்.சண்முகம் ஆகியோர் மற்றொரு அணியாகவும் வாதிட்டனர். கம்பன் கழக நிர்வாகி தா.கு.சுப்ரமணியன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com