மு.க.ஸ்டாலினை முதல்வராக்குவதே லட்சியம்: வைகோ பேச்சு

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை முதல்வராக்குவதே தனது ஒரே லட்சியம் என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ கூறினார். 
மு.க.ஸ்டாலினை முதல்வராக்குவதே லட்சியம்: வைகோ பேச்சு

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை முதல்வராக்குவதே தனது ஒரே லட்சியம் என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ கூறினார்.

பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து திமுக மற்றும் தோழமைக் கட்சிகள் சார்பில் மதுரை ஓபுளா படித்துறையில் செவ்வாய்க்கிழமை இரவு கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. திமுக மாவட்டச் செயலர்கள் வேலுச்சாமி, கோ.தளபதி ஆகியோர் தலைமை வகித்தனர்.  இதில் வைகோ பேசியதாவது:
  தமிழகத்தின் நிலையை மாற்ற திமுகவால் மட்டுமே முடியும். திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலினை முதல்வராக்க வேண்டும் என்பதே ஒரே லட்சியம். இதை எந்த பதவி ஆசையிலும் நான் கூறவில்லை. 

30 ஆண்டுகள் திமுகவுக்காக உழைத்துள்ளேன். எனக்கு அடையாளம் கொடுத்தவர் கருணாநிதி. அன்றைய அரசியல் சூழலில் திமுக தலைவர் கருணாநிதியை முதல்வராக்கும் நோக்கில் எப்படி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பிரசாரம் செய்தேனோ அதேபோல மு.க. ஸ்டாலினுக்காகவும் பிரசாரம் செய்வேன். 14 ஆண்டுகளுக்கு பின்னர் திமுக மேடையில் பேசுகிறேன். திராவிடத்தை தமிழகத்தில் வேரூன்ற வைத்த திமுகவின் மீது நான் கொண்ட பற்றே இதற்கு காரணம். 

பலர் திராவிடம் இல்லா தமிழகம் மலரும் என்றும்,  புதியவர்கள் பலர் கட்சி தொடங்கும் எண்ணத்திலும் இருக்கின்றனர். எத்தனை தலைகள் புதிதாக முளைத்தாலும் திமுகவை அசைக்கும் சக்தி யாருக்கும் கிடையாது. திமுகவுக்கும், மதிமுகவுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னைகள் அனைத்தும் அண்ணன்-தம்பி, தந்தை-மகன் இடையே ஏற்பட்ட பிரச்னைகள் போன்றவை. திராவிடத்தையும், தமிழ் மொழியையும் என் உயிருக்கு மேலாக நேசிக்கிறேன். நானும், மதிமுக தொண்டர்களும் திமுகவுக்காக பிரதிபலன் பாராமல் பணியாற்றுவோம்.  

இந்தியாவிலேயே தமிழக போக்குவரத்துத் துறை தான் மோசமாக உள்ளது. இங்குள்ள 21 ஆயிரத்து 928 பேருந்துகளில் 70 சதவீத பேருந்துகள் பழமையானவை. மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் இருக்க வேண்டும் என்பதற்காக காவிரி வேளாண்மை பாதுகாப்பு மண்டலம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தோம். ஆனால், அவர்களோ மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி அளித்து தமிழகத்தை ரசாயன ஆய்வு மண்டலமாக மாற்றியுள்ளனர். 

தமிழகத்தில் பல்கலைக்கழகங்கள் அனைத்தும் வணிகமயமாகிவிட்டன. தமிழகத்தில் ஒவ்வொரு துணைவேந்தரும் பதவிக்காக பல கோடிகளைச் செலவு செய்கின்றனர். இந்நிலை மாற வேண்டும். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவைத் தோற்கடிக்க வேண்டும் என்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த உ.வாசுகி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி பி.சேதுராமன், மனிதநேய மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட தோழமைக் கட்சியினர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com