வாக்குகளுக்காக ஆலயங்களை வணிகமயமாக்குவது சரியல்ல

வாக்கு வங்கிக்காக நமது பண்பாட்டு அடையாளமாக உள்ள ஆலயங்களில் கடைகளை அனுமதித்து வணிகமயமாக்குவது சரியல்ல என மதிமுக பொதுச்செயலர் வைகோ கூறினார்.

வாக்கு வங்கிக்காக நமது பண்பாட்டு அடையாளமாக உள்ள ஆலயங்களில் கடைகளை அனுமதித்து வணிகமயமாக்குவது சரியல்ல என மதிமுக பொதுச்செயலர் வைகோ கூறினார்.
   மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் வீர வசந்தராயர் மண்டகத்தில் நிகழ்ந்த தீ விபத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை செவ்வாய்க்கிழமை பார்வையிட்ட அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 
   தமிழர் பண்பாட்டின் அடையாளமாகவே மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் உள்ளது.  உலக அளவில் தமிழக கோயில்களில் மட்டுமே வேறு எங்கும் இல்லாத சிறந்த கலை சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த நிலையில், பல நூற்றாண்டுகளாக பாதுகாக்கப்பட்டு வந்த கோயிலில் வசந்தராயர் மண்டபத்தில் தீ விபத்து ஏற்பட்டு, கட்டட மேற்கூரைகள் இடிந்திருப்பது உலகத் தமிழர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
  விபத்து நடந்ததை தொடர்ந்து அங்குள்ள கடைகளை அகற்றுவதற்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையும் உத்தரவிட்டுள்ளது. அதை கோயில் தக்கார் மற்றும் நிர்வாகம் செயல்படுத்த வேண்டியது அவசியம். மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் மட்டுமல்ல, சங்கரன் கோயில் உள்ளிட்ட தமிழக அனைத்துக் கோயில்களிலுமே கடைகள் அதிகமாக உள்ளன. 
 பக்தர்கள் வழிபடும் கோயில்களில் கடைகள் இருப்பது சரியல்ல. பூஜைப் பொருள்களைக் கூட கோயில்களுக்கு வெளியே அமைந்துள்ள கடைகளிலே வாங்க வேண்டுமே தவிர, கோயிலுக்குள் கடைகள் வைத்து விற்பது சரியல்ல. கோயிலுக்கு வெளியே கடைகள் இருக்கலாம். கோயில்களை வணிகத் தலங்களாக மாற்றியிருப்பது சரியல்ல என்றார்.
    வைகோவுடன், மதிமுக மதுரை மாநகர் மாவட்டச் செயலர் புதூர் மு.பூமிநாதன், புறநகர் மாவட்டச் செயலர்கள் மார்நாடு (வடக்கு), கதிரேசன் (தெற்கு) மற்றும் மாநில தொழிற்சங்க இணைப் பொதுச்செயலர் எஸ்.மகபூப்ஜான், மாநகர் மாவட்ட பொருளாளர் தி.சுப்பையா உள்ளிட்டோர் வந்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com