உயர்நிலைப் பள்ளிக் கட்டடத்தை திறக்கக்கோரி மனு: ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

மதுரை பெரிய ஆலங்குளத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளிக் கட்டடத்துக்கு தேவையான அடிப்படை வசதிகளைப் பூர்த்தி செய்து உடனடியாக

மதுரை பெரிய ஆலங்குளத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளிக் கட்டடத்துக்கு தேவையான அடிப்படை வசதிகளைப் பூர்த்தி செய்து உடனடியாக திறக்கக்கோரிய மனு தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.
மதுரை  திருப்பரங்குன்றம் கோமஸ்பாளையத்தை சேர்ந்த எம்.முத்துசெல்வம் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:
 மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள பெரிய ஆலங்குளத்தில் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் 1.60 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட உயர்நிலைப் பள்ளிக்கட்டடம் இதுவரை பயன்பாட்டிற்கு வரவில்லை. இதுகுறித்து நாளிதழ்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் அங்கு சென்று பார்த்தபோது 200 மாணவர்கள் படிக்கும் இடத்தில் 600 மாணவர்கள் பயின்று வருவது தெரியவந்தது. உயர்நிலைப் பள்ளிக்கென தனிகட்டடம் இல்லாத நிலையில் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி வளாகத்தில் உள்ள கட்டடத்தில் தான் உயர்நிலைப் பள்ளியும் செயல்பட்டு வருகிறது. 
இந்நிலையில் 2011-இல் 110 விதியின் கீழ் முதல்வர் அறிவித்ததன் அடிப்படையில் புதிய பள்ளிக் கட்டடம் கட்டப்பட்டது. ஆனால் இன்று வரை பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. 
இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, பள்ளிக்குச் செல்ல தனிப்பாதை இல்லை என்றும் பள்ளியை சுற்றி வயல்வெளிகள் இருப்பதால் உடனடியாக திறக்க இயலாதென்றும் தெரிவித்தனர். 
 எனவே பெரிய ஆலங்குளத்தில் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட உயர்நிலைப் பள்ளிக் கட்டிடத்தை உடனடியாக திறக்கவும், ஏற்கெனவே உள்ள ஆரம்பப் பள்ளியிலும், புதிய உயர்நிலைப் பள்ளியிலும் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் செய்து தரவும் உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். 
 இந்த மனு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ஹேமலதா அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், பள்ளிக்குத் தேவையான அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்தும், புதிய கட்டடம் எப்போது திறக்கப்படும் என்பது குறித்தும் மதுரை மாவட்ட ஆட்சியர் தற்போதைய நிலைஅறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை பிப்ரவரி 23 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com