கருகும் பயிருக்கு தண்ணீர் கேட்டு வாடிப்பட்டி அருகே விவசாயிகள் சாலை மறியல்

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே கருகி வரும் பயிர்களை காப்பாற்ற தண்ணீர் விடக்கோரி விவசாயிகள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே கருகி வரும் பயிர்களை காப்பாற்ற தண்ணீர் விடக்கோரி விவசாயிகள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மதுரை மாவட்டம் அணைப்பட்டியில் இருந்து கள்ளந்திரி வரையுள்ள இருபோக சாகுபடி நிலங்களில் பெரியாறு பிரதான பாசன கால்வாய் தண்ணீரை நம்பி சுமார் 45 ஆயிரம் ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது தண்ணீர் திறந்து விடப்படாததால் இந்த பயிர்கள் கருகி வருகின்றன. இதையடுத்து பயிருக்கு தண்ணீர் விடக்கோரி, மதுரை தமுக்கம் பகுதியில் விவசாயிகள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி தண்ணீர் திறக்க அரசுக்கு பரிந்துரை செய்திருப்பதாக கூறியதை அடுத்து விவசாயிகள் கலைந்து சென்றனர்.
ஆனால் தண்ணீர் திறப்பது குறித்து எந்த அறிவிப்பும் வராததால் வாடிப்பட்டி அருகே உள்ள ஆண்டிபட்டி பங்களா பகுதியில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகம் முன் ஏராளமான விவசாயிகள் புதன்கிழமை காலை திரண்டனர். பயிர்களுக்கு தண்ணீர் விடுமாறு கோஷமிட்டு அலுலவலகத்தை முற்றுகையிட முயன்றனர். தகவலறிந்து வந்த காவல் துறையினர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாததை அடுத்து விவசாயிகள் அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். 
இதையடுத்து விவசாயிகளின் பிரதிநிதிகள் 15 பேரை ஆட்சியரை சந்திக்க அழைத்துச்செல்வதாக காவல்துறையினர் தெரிவித்ததை அடுத்து மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது. பின்னர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கொ.வீரராகவராவை சந்தித்துப் பேசினார். அப்போது தண்ணீர் திறப்பது தொடர்பாக அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி அறிவிப்பதாகவும், அதுவரை போராட்டத்தை கைவிட வேண்டும் என்றும் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து போராட்டத்தை ஒத்தி வைப்பதாக விவசாயிகள் அறிவித்தனர்.
இதுதொடர்பாக விவசாயிகளின் பிரதிநிதி திருப்பதி கூறியது:  வழக்கமாக அணைப்பட்டி முதல் கள்ளந்திரி வரை உள்ள இருபோக சாகுபடி நிலங்களுக்கு தண்ணீரை முழுமையாக திறந்து விடப்பட்ட பின்னரே ஒருபோக சாகுபடிக்கு தண்ணீர் வழங்க வேண்டும் என்று அரசு ஆணையில் கூறப்பட்டுள்ளது. ஆனால் தற்போது இருபோக சாகுபடி நிலங்களுக்கே தண்ணீர் பற்றாக்குறையாக இருக்கும்போது, விதிகளை மீறி அரசியல்வாதிகளின் செல்வாக்கை பயன்படுத்தி பிடிஆர் கால்வாய், தந்தை பெரியார் கால்வாய், 18-ஆம் கால்வாய் ஆகியவற்றுக்கு தண்ணீர் முறைகேடாக திறந்துவிடப்பட்டுள்ளது. 
ஏற்கெனவே இருபோக சாகுபடி நிலங்களுக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று செப்டம்பர் 20-இல் மனு அளித்தோம். ஆனால் நவம்பர் 1-ஆம் தேதி தான் தண்ணீர் திறக்கப்பட்டது. 120 நாள்கள் தண்ணீர் தேவைப்படும் நிலையில் 90 நாள்களுக்கு மட்டுமே தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் தண்ணீரின்றி 45 ஆயிரம் ஏக்கரில் 20 சதவீத நிலங்களில் பயிர்கள் கருகிவிட்டன. தற்போது மிஞ்சியுள்ள பயிரைக்காப்பாற்ற இரண்டு முறை தண்ணீர் வேண்டும் என்று தான் போராடி வருகிறோம்.  பொதுப்பணித்துறை அதிகாரிகள் தண்ணீரை முறையாக கையாளவில்லை. 
மதுரை மாவட்டத்தில் பயிர்களுக்கு தண்ணீர் இல்லை. ஆனால் தேனி மாவட்டத்தில் மீன் வளர்ப்புக்காக கண்மாய்களுக்கு தண்ணீர் விற்கப்பட்டுள்ளது. மேலும் முறை பாசனத்தில் 4 நாள்கள் தண்ணீர் அடைக்கப்படும். 6 நாள்கள் திறக்கப்படும். ஆனால் தற்போது 6 நாள்கள் அடைக்கப்பட்டு 4 நாள்கள் மட்டுமே தண்ணீர் திறக்கப்படுகிறது. எனவே கருகும் பயிர்களைக் காப்பாற்ற அரசு உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com