மானிய விலையில் இருசக்கர வாகனம் பெற மாநகராட்சியில் 6,854 பேர் விண்ணப்பம்

தமிழக அரசின் விலையில்லா இருசக்கர வாகனம் பெறுவதற்கு மதுரை மாநகராட்சியில் 6,854 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

தமிழக அரசின் விலையில்லா இருசக்கர வாகனம் பெறுவதற்கு மதுரை மாநகராட்சியில் 6,854 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களது முகவரி உள்ளிட்ட விவரங்களை சரிபார்க்கும் பணியில் மாநகராட்சி வரிவசூல் பிரிவினர் ஈடுபட்டுள்ளனர். 
பணியிலிருக்கும் மகளிருக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதற்கான விண்ணப்பங்கள் மதுரை மாநகராட்சி மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூலம் விநியோகிக்கப்பட்டு வந்தன.மதுரை மாவட்ட அளவில் இதுவரை 9,400-க்கும் மேற்பட்டோர் மானிய விலை இருசக்கர வாகனம் வாங்க விண்ணப்பித்துள்ள நிலையில், மதுரை மாநகராட்சியில் மட்டும் 6,854 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் மண்டலம் 2 பகுதியில் (வடக்கு) மட்டும் 2091 மகளிர் விண்ணப்பித்துள்ளனர். அதற்கடுத்தபடியாக மண்டலம் 4 (தெற்கு) பகுதியிலிருந்து 1796 பேர் விண்ணப்பித்துள்ளனர். 
விண்ணப்பித்தவர்களில் முதல் கட்டமாக விதவைகள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு மானிய விலை இருசக்கர வாகனம் வழங்கும் திட்ட விழாவானது விரைவில் நடைபெறவுள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து விண்ணப்பித்தவர்களது முகவரிக்கு நேரில் சென்று விசாரித்து விண்ணப்பத் தகவல்களை உறுதிபடுத்தும் பணியில் மாநகராட்சி வருவாய்ப் பிரிவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.மாநகராட்சியின் வரிவசூல் செய்வோர் மூலமே விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டுவருகின்றன. அவர்கள் வீடு வீடாகச் சென்று முகவரி மற்றும் விண்ணப்பங்களில் குறிப்பிட்ட விவரங்களை சரிபார்த்தும் வருகின்றனர்.
புகார்கள்: விதிமுறைகளின் படி மாநகராட்சி அதிகாரிகள் மானிய விலை இருசக்கர வாகனத் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுத்துவரும் நிலையில், அரசியல் பிரமுகர்கள் தனியாக விண்ணப்பங்களைப் பெற்று அதற்கு முன்னுரிமை அளிக்கவும் அலுவலர்களிடம் வற்புறுத்துவதாக புகார்கள் எழுந்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com