கமல்ஹாசன் கட்சியில் அணிவகுத்த திரை நட்சத்திரங்கள்: காலில் விழ அனுமதி இல்லை, மாலை, பொன்னாடைகள் கிடையாது

மதுரையில் புதன்கிழமை நடைபெற்ற கமல்ஹாசன் பொதுக்கூட்டத்தில் நடிகர் வையாபுரி, சினேகன் போன்ற திரை நட்சத்திரங்கள் இடம் பெற்றனர்.
கமல்ஹாசன் கட்சியில் அணிவகுத்த திரை நட்சத்திரங்கள்: காலில் விழ அனுமதி இல்லை, மாலை, பொன்னாடைகள் கிடையாது

மதுரையில் புதன்கிழமை நடைபெற்ற கமல்ஹாசன் பொதுக்கூட்டத்தில் நடிகர் வையாபுரி, சினேகன் போன்ற திரை நட்சத்திரங்கள் இடம் பெற்றனர். மேலும் தனது கட்சியில் காலில் விழவும், பொன்னாடைகளுக்கும் அனுமதி இல்லை எனவும் கமல்ஹாசன் தெரிவித்தார்.
ஒரே காரில் வந்த கமல்ஹாசன், புதுதில்லி முதல்வர் அரவிந்த்கேஜரிவால்
மாநாட்டில் பங்கேற்பதற்காக புதுதில்லியில் இருந்து புறப்பட்ட முதல்வர் அரவிந்த் கேஜரிவால் மாலை 4.20-க்கு மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். அங்கிருந்து கார் மூலம் அழகர்கோவில் சாலையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்று ஓய்வெடுத்தார். இந்நிலையில் ராமேசுவரத்தில் பிரசார பயணத்தை முடித்துக்கொண்டு மதுரைக்கு மாலை 4 மணிக்குத் திரும்பிய கமல்ஹாசன் காளவாசலில் உள்ள தனியார் விடுதியில் ஓய்வெடுத்தார். பின்னர் இரவு 7 மணிக்கு அரசு விருந்தினர் மாளிகைக்குச் சென்ற கமல்ஹாசன், அரவிந்த் கேஜரிவாலை வரவேற்றார். பின்னர் முதல்வர் அரவிந்த கேஜரிவால் தனக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காரை விட்டுவிட்டு கமல்ஹாசனின் காரில் புறப்பட்டார்.
சரிந்து விழுந்த எல்இடி திரைகள்
ஒத்தக்கடையில் வேளாண் கல்லூரி எதிரே உள்ள மைதானத்தில் திறந்த வெளி மேடை அமைக்கப்பட்டிருந்தது. தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு மேடை அமைக்கும் சென்னையை சேர்ந்த திரைப்பட தொழில்நுட்ப கலைஞர்களைக் கொண்டு மேடை அமைக்கப்பட்டிருந்தது. மேடையின் பின்புறம் மற்றும் இருபுறமும் எல்இடி திரைகள் அமைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் புதன்கிழமை காலை மேடை அமைக்கும் பணியின்போது மேடைக்கு பக்கவாட்டில் வைக்கப்பட்டிருந்த எல்இடி திரைகள் காற்றில் சரிந்து விழுந்தன. இதனால் மேடை அமைக்கும் பணியில் பாதிப்பு ஏற்பட்டது. அப்போது செய்தியாளர்கள் இதை படம் பிடித்ததால் செய்தியாளர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
தாமதமாக தொடங்கிய மாநாடு: மாநாட்டில் மாலை 5 மணிக்கு கமல்ஹாசன் கொடியேற்றுவார் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் 5 மணி முதல் கலை நிகழ்ச்சிகள் மட்டுமே நடந்து வந்தன. இரவு 7.20 வரை கமல்ஹாசன் வராததால் அதிருப்தி அடைந்த ரசிகர்கள் கமல் வருவாரா, மாட்டாரா என்று குரல் எழுப்பினர்.
தமிழர் கலை நிகழ்ச்சிகள்: மாநாடு மாலை 5 மணிக்கு தமிழர்களின் பாரம்பரிய கலைகளான தப்பாட்டம், உறுமி மேளம், நாதஸ்வரம் ஆகியவற்றுடன் தொடங்கியது. 
கொடி அறிமுகம்: மாநாட்டு அரங்குக்கு சரியாக இரவு 7.30 மணிக்கு புதுதில்லி முதல்வர் அரவிந்த கேஜரிவாலுடன் வந்த கமல்ஹாசனுக்கு வானவேடிக்கைகள், மேள தாளங்களுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அரங்குக்கு வந்த கமலஹாசன் மேடைக்கு செல்லாமல் மேடையின் அருகே அமைக்கப்பட்டிருந்த 49 அடி உயர கொடிக்கம்பத்தில் தொண்டர்களின் உற்சாக கோஷங்களுடன் கொடியை ஏற்றினார். பின்னர் மேடையேறிய அவர் வெள்ளை நிறத்தில் 6 கரங்கள் வட்ட வடிவமாக இணைக்கப்பட்டு நடுவில் நட்சத்திரம் பொறிக்கப்பட்ட கொடியை அறிமுகப்படுத்தி வைத்தார்.
கட்சியில் இணைந்த பிரபலங்கள்
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் ஐஏஎஸ் அதிகாரி ரங்கராஜன், நடிகை ஸ்ரீ பிரியா, நடிகர்கள் வையாபுரி, நாடோடி பரணி, வில்லன் நடிகர் ஆர்.கே.சுரேஷ்,  திரைப்பட இயக்குநர் சுகா, நடிகர் நாசரின் மனைவி கமீலா நாசர், கவிஞர் சினேகன்,  பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், முன்னாள் ஏடிஜிபி ஏ.ஜி.மெளரியா, ஆவணப்பட இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார் உள்பட பலர் இணைந்தனர். அவர்கள் மேடையில் வைத்து தொண்டர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டனர். மேலும் அவர்கள் கட்சியின் உயர்மட்டக்குழு உறுப்பினர்களாகவும் அறிவிக்கப்பட்டனர். மேலும் மாநாட்டு மேடையில் மக்கள் நீதிமய்யத்தின் மாவட்ட பொறுப்பாளர்கள், நிர்வாகிகளும் அறிவிக்கப்பட்டனர். 
மாநாட்டு ஜோதி: திருச்சியை சேர்ந்த கமல்ஹாசன் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த 10 பேர் திருச்சியில் இருந்து தொடர் ஓட்டமாக மதுரைக்கு மாநாட்டு ஜோதியை ஏந்தி வந்தனர். மாநாட்டு மேடையில் ஜோதியை கமல்ஹாசன், புதுதில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் ஆகியோர்  பெற்றுக்கொண்டனர்.
காலில் விழ அனுமதி இல்லை: கமல்ஹாசன் மேடையில் அமர்ந்த பிறகு அவரது காலில் விழவோ, மாலை, பொன்னாடைகள் அணிவிக்கவோ அனுமதி இல்லை. சால்வை வழங்க விரும்புபவர்கள் ஆடைகளாக கொடுத்தால் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு வழங்கப்படும் என்று நிர்வாகிகள் அறிவித்தனர். மேலும் இனி எப்போதும் மக்கள் நீதி மய்யத்தின் தொண்டர்கள் பொதுமேடைகளில் கமல்ஹாசனின் காலில் விழும் கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது என்றும் அறிவிக்கப்பட்டது. 
உடல் தானம் செய்த தொண்டர்கள்: மாநாட்டில் உடல்தானம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மாநாட்டில் பங்கேற்ற  தொண்டர்கள் உடல் தானம் வழங்கும் படிவத்தில் கையெழுத்திடலாம் என்று அறிவிக்கப்பட்டது.  மேலும் நிர்வாகிகள் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று உடல் தானம் வழங்கும் படிவத்தில் கையெழுத்து பெற்றனர்.
20 ஆயிரம் பேர் பங்கேற்பு: மாநாட்டுக்கு 35 பேருந்துகள், 175 வேன்கள், 500 கார்கள், 81 ஆட்டோக்கள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். ஆனால் மாநாட்டில் பெண்கள் மிகக்குறைவாகவே பங்கேற்றனர். பங்கேற்ற பெண்களின் எண்ணிக்கை 700-க்குள் மட்டுமே இருந்தது. 
350 போலீஸார் பாதுகாப்பு: புதுதில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் பங்கேற்பற்றதை அடுத்து 3 டிஎஸ்பிக்கள், 15 ஆய்வாளர்கள், 55 சார்பு ஆய்வாளர்கள் உள்பட 350 போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.
நவீன கழிப்பறைகள்: மாநாட்டில் பங்கேற்பவர்களின் வசதிக்காக மைதானத்தில் தாற்காலிக நவீன கழிப்பறைகள் ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனியாக 50-க்கும் மேற்பட்ட கழிப்பறைகள் அமைக்கப்பட்டிருந்தன.
குவிந்த ஊடகங்கள்: பொதுக்கூட்ட நிகழ்ச்சி குறித்து செய்தி சேகரிக்க இந்தியா முழுவதும் இருந்து ஏராளமான ஊடகங்கள் மாநாட்டில் பங்கேற்றன. சுமார் 300-க்கும் மேற்பட்ட செய்தியாளர்கள் பங்கேற்றனர்.

வீர விளையாட்டு போட்டிகள்
மாநாடு மாலையில் தொடங்கினாலும் மைதானத்தில் காலையில் இருந்தே நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாநாட்டையொட்டி தமிழர்களின் போர்க்கலையான சிலம்பம், வாள் வீச்சு, சுருள் கத்தி வீச்சு, வாள் கேடயம் சண்டை உள்ளிட்ட பல்வேறு வீர விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இதில் 5 வயது சிறுவர், சிறுமியர் முதல் 60 வயது வரை உள்ளவர்கள் பங்கேற்றனர். 18 அணிகளில் 250 பேர் பங்கேற்றனர். காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மேடையில் பரிசுக்கோப்பைகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ஒத்தக்கடையில் இருந்து நிகழ்ச்சி நடைபெற்ற மைதானத்தைச் சுற்றிலும் வெள்ளை நிறக்கொடியில் தமிழக வரைபடத்துடன் "நாளை நமதே' என்ற வாசகங்கள் அடங்கிய கொடிகள் வைக்கப்பட்டிருந்தன. மாநாட்டில் பங்கேற்ற கமல்ஹாசன் ரசிகர்கள் அனைவரும் நம்மவர் என்ற வாசகம் பொறிக்கப்பட்ட கமல்ஹாசன் படத்துடன் கூடிய பனியன் (டி.சர்ட்) அணிந்திருந்தனர்.

தனியார் பாதுகாவலர்கள்
மேடைக்கு கீழே முக்கிய பிரமுகர், ஊடகங்கள், பெண்கள், ரசிகர்களுக்கு தனித்தனியாக இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தன. முக்கிய பிரமுகர்கள் மற்றும் ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு தனியாக பாஸ் வழங்கப்பட்டிருந்தது. கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில் ரசிகர் மன்ற நிர்வாகிகளோடு தனியார் பாதுகாவலர்களும் ஈடுபட்டிருந்தனர். பெண் பாதுகாவலர்கள் 25 பேருடன் 125 பாதுகாவலர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். கூட்டத்துக்கு வருபவர்கள் அமருவதற்காக 25 ஆயிரம் இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தன. கூட்டத்துக்கு வரும் வழியில் விளம்பரப் பதாகைகளை அமைக்கக்கூடாது என்று கமல்ஹாசன் அறிவித்திருந்ததால் மைதானத்தில் மட்டுமே  பதாகைகள் அமைக்கப்பட்டிருந்தன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com