நாம் என்ற எண்ணத்துடன் வாழ வேண்டும்: தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்

அன்பை வளர்க்க நான் என்பதை மறந்து நாம் என்ற எண்ணத்துடன் வாழ வேண்டும் என தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தெரிவித்தார். 

அன்பை வளர்க்க நான் என்பதை மறந்து நாம் என்ற எண்ணத்துடன் வாழ வேண்டும் என தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தெரிவித்தார். 
பசுமலை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் சமய நல்லிணக்கப் பொங்கல் விழா மற்றும் தேசிய இளைஞர் தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் எஸ்.நேரு தலைமை வகித்தார். செயலர் எம்.விஜயராகவன், பொருளாளர் எல்.கோவிந்தராஜன், உதவிச் செயலர் ராஜேந்திரபாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் தவத்திரு பொன்னம்பல அடிகளார் பேசியது: 
நாம் போகிப் பண்டிகையின் போது வீடுகளைத் தூய்மை செய்கிறோம். ஆனால் இதயத்தை தூய்மைப்படுத்துவதில்லை. வீட்டிற்கு வரும் உறவினர்களை உபசரிக்கும் பண்பு தற்போது மறைந்து வருகிறது. ஏழைகளுக்கு தொண்டு செய்வதே சிறந்த இறை தொண்டாகும். பசிக்கு உணவாகவும், நோய்க்கு மருந்தாகவும் இறைவன் உள்ளார். அனைவருக்கும் அன்பு தேவை. அன்பில்தான் உயிர் உள்ளது. அந்த உயிர்நிலையைதான் நாம் வளர்க்க வேண்டும். நான் என்பதை மறந்து நாம் என்ற எண்ணத்துடன் வாழ வேண்டும். அன்பே சிவம் என்றார் திருமூலர். அன்பு இல்லையேல் ஒன்றும் இல்லை எனக்கூறுகிறது பைபிள். அயலார் துன்பங்களை போக்குவதே மனிதக் கடமை என இஸ்லாம் கூறுகிறது. அன்பின் வழி உயிர்நிலை என்பார் வள்ளுவர். எல்லா சமயங்களும் அன்பையே வலியுறுத்துகின்றன என்றார்.  
தமிழக ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் அந்தோணி பாப்புசாமி பேசியது: இறைவன் ஒருவனே நிறைவு. இது அனைத்து சமயத்தின் பொதுப்பண்பாகும்.  அனைத்து சமயத்தின் பின்புலத்தில் இருப்பது இறை உணர்வாகும். உறவே மனிதம். உறவே புனிதம். பொங்கல் விழாவிற்கு நுழைவாயிலாக இருப்பது எதுவென்றால், நம்மை நாமே புதுப்பித்துக்கொள்ளும் ஒரு வழியை இந்த விழா ஏற்படுத்துகிறது என்றார்.
மதுரை ஐக்கிய ஜமாத் தலைவர் ஏ.பசீர்அகமது பேசியது: சமய நல்லிணக்கத்திற்கு அடிப்படையாக விளங்குவது சகோதரத்துவம். பொங்கல் விழா உலகத் தமிழர்களின் தேசிய விழாவாகும் என்றார்.     
நிகழ்ச்சியில் தமிழக ஆயர் பேரவைத் தலைவர் ரெங்கபாஷ்யம், மதுரை பிரம்மா குமாரிகள் இயக்கத்தைச் சேர்ந்த செல்வி பி.கே. உமா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 
முன்னதாக கல்லூரியில் மாணவியர் துறை வாரியாக பாரம்பரிய முறைப்படி மண் பானையில் பொங்கல் வைத்து கொண்டாடினர். பேராசிரியர்கள் சு.விஷ்ணுசுபா வரவேற்றார்.  தி. மல்லிகா நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com