"மீனவர்கள், கல்வி, தொலைதொடர்புகளுக்கு அதிகமான செயற்கைகோள்கள் அனுப்ப இஸ்ரோ நடவடிக்கை'

மீனவர்கள், கல்வி, தொலைதொடர்பு உள்ளிட்டவைகளுக்கு இன்னும் அதிகமான செயற்கைகோள்கள் அனுப்ப வேண்டியுள்ளது.

மீனவர்கள், கல்வி, தொலைதொடர்பு உள்ளிட்டவைகளுக்கு இன்னும் அதிகமான செயற்கைகோள்கள் அனுப்ப வேண்டியுள்ளது. அதற்கான நடவடிக்கைகளை இஸ்ரோ எடுத்து வருகிறது என மகேந்திரகிரியில் திரவ இயக்க ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் பாண்டியன் தெரிவித்தார்.
மதுரை விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: 
பிஎஸ்எல்வி சி- 40 ராக்கெட் மூலம் 31 செயற்கைகோள்கள் விண்ணில் ஏவப்பட்டது. இதில் அமெரிக்கா, இங்கிலாந்து,  கனடா, பின்லாந்து,  தெற்குகொரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 28  செயற்கைகோள்களும், இந்தியாவில் இருந்து 3 செயற்கைகோள்களும் என மொத்தம் 31 செயற்கை கோள்கள் இரண்டு சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.  இது இந்தியாவிற்கு மிகப்பெரிய வெற்றியாகும். இதனால் நாடு பெருமை கொள்கிறது. 
ராக்கெட்களில் திட, திரவ எரிபொருள் பயன்படுத்தப்படும். அதில் 2 திரவ எஞ்சின்கள் வடிவமைத்தது மகேந்திரகிரியில் தான். தவிர சந்திராயன் 2 வெகுவிரைவில் ஏவப்பட உள்ளது. அதற்கான அனைத்துப் பணிகளும் மகேந்திரகிரியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதேபோல செமிகிரையோஜனிக் எஞ்சின் தயாரிக்கவும் இங்கு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை இந்தியாவிலிருந்து 101 செயற்கைகோள்கள் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் ஜிஎஸ்எல்வி  வரும் பிப்ரவரி மாதம் ஏவப்பட உள்ளது.  அதேபோல ராக்கெட்களின் எஞ்சின்கள் வானிலேயே எரிந்து கடலில் விழுவதற்கான ஆராய்ச்சிகளும் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளன. மீனவர்கள், கல்வி, தொலைதொடர்பு உள்ளிட்டவைகளுக்கு இன்னும் அதிகமான செயற்கைகோள்கள் அனுப்ப வேண்டியுள்ளது.  அதற்கான நடவடிக்கைகளை இஸ்ரோ எடுத்து வருகிறது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com