தமிழர்களின் பெருமைகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும்: உயர்நீதிமன்ற நீதிபதி என். கிருபாகரன்

தமிழர்களின் பெருமைகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என். கிருபாகரன் கூறினார்.

தமிழர்களின் பெருமைகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என். கிருபாகரன் கூறினார்.
சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வழக்குரைஞர்கள் சங்கம் (எம்பிஏ), பெண் வழக்குரைஞர்கள் சங்கம், சென்னை உய்நீதிமன்ற மதுரைக் கிளை வழக்குரைஞர்கள் சங்கம்(எம்எம்பிஏ), சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வழக்குரைஞர்கள் சங்கம் (எம்பிஎச்ஏஏ) சார்பில் உயர்நீதிமன்ற வளாகத்தில் பொங்கல் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் பங்கேற்று நீதிபதி என்.கிருபாகரன் பேசியது:
தமிழகத்தில் முன்பு தீபாவளியைவிட பொங்கல் விழா தான் சிறப்பாகக் கொண்டாடப்படும். தற்போது கொண்டாட்டங்களில் பொங்கல் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. முன்பு இயற்கையைத் தெய்வமாக வழிபட்டோம். ஆனால், இப்போது இயற்கை மிகவும் மாசடைந்துள்ளது. இந்நிலை மாற வேண்டும்.
தற்போது ஆங்கிலக் கலப்பு இல்லாமல் பேச முடியாது. உலகம் முழுவதும் செல்ல வேண்டும் என்றால் ஆங்கிலம் அவசியம். தமிழ் மட்டும் தெரிந்திருந்தால் குறுகிய வட்டத்துக்குள் அடைபட்டுவிடுவோம். தமிழ் ஆட்சி மொழியாக வேண்டும், நீதிமன்ற அலுவல் மொழியாக வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
நமது நீதிமன்ற தீர்ப்புகள் அனைத்து இடங்களுக்கும் செல்ல வேண்டும். தமிழகத்தில் தமிழிலும், பிற மாநிலங்களில் அந்த மாநில மொழிகளில் வழக்குகள் நடந்தால் வெளியே தெரியாமல் போய்விடும். இந்த முறை பல்வேறு சிக்கல்களை உருவாக்கும். இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு பாதிப்பு ஏற்படுத்தும்.
தமிழ் மீது காதல் கொள்வது தவறில்லை. நம்முடைய இயலாமையால் ஆங்கிலம் பேச முடியாமல் தமிழ் வேண்டும் எனக் கேட்டால் அது தவறு. ஆங்கிலம் அவசியமான மொழி, உலக மொழி. நம்முடைய நன்மைக்காக ஆங்கிலம் கற்பதில் தவறில்லை.
தமிழர்கள், தமிழ் எனப் பேசிக்கொண்டிருக்கிறோம். இந்தியா பரந்து விரிந்த நாடு. அதற்கு ஏற்றார் போல வாழ வேண்டும். நம்முடைய கலாசாரத்தை போற்றுவதுடன் உலகம் பெரியது என்பதையும் உற்று நோக்க வேண்டும். தமிழர்கள் பரந்த மனப்பான்மை கொண்டவர்கள்.
தமிழ் மிகப்பழமையான மொழி என்பது கீழடி, ஆதிச்சநல்லூர் அகழாய்வில் விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒரு லட்சம் கல்வெட்டுகள் உள்ளன.
அதில் 60 ஆயிரம் கல்வெடுட்கள் தமிழ் மொழியில் உள்ளன. போராடி செம்மொழி அந்தஸ்து பெற்றுள்ளோம். அதைக் காப்பாற்றும் கடமை அனைவருக்கும் உள்ளது. தமிழ் மொழியை, கலாசாரத்தை அடுத்த தலைமுறைக்கு கற்பிக்க வேண்டும் என்றார்.
விழாவில் பேராசிரியர் சாலமன் பாப்பையா, வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர்கள் கு.சாமித்துரை, ஜான் வின்சென்ட், கிருஷ்ணவேணி, ராமமூர்த்தி, செயலர்கள் அழகுராம்ஜோதி, ஆனந்தவள்ளி, வெங்கேடசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதைத்தொடர்ந்து நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞர்களுக்கான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com