கல்விக் கடன் முகாம்: 100 மாணவர்களுக்கு ரூ.1.5 கோடி கடன் வழங்க ஒப்புதல் ஆணை: ஆட்சியர் வழங்கினார் 

மதுரையில் வியாழக்கிழமை நடைபெற்ற கல்விக் கடன் முகாமில் 100 மாணவர்களுக்கு ரூ.1.5 கோடி கடன் வழங்குவதற்கான ஒப்புதல் ஆணைகளை, மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவ் வழங்கினார்.

மதுரையில் வியாழக்கிழமை நடைபெற்ற கல்விக் கடன் முகாமில் 100 மாணவர்களுக்கு ரூ.1.5 கோடி கடன் வழங்குவதற்கான ஒப்புதல் ஆணைகளை, மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவ் வழங்கினார்.
     பள்ளிக் கல்வித் துறை சார்பில் 2016-17-இல் பிளஸ் 2 தேர்ச்சி பெற்று தற்போது கல்லூரிகளில் முதலாண்டு படித்து வரும் மாணவர்களுக்கான கல்விக் கடன் முகாம், மதுரை புனித பிரிட்டோ மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது.      இந்த முகாமை தொடக்கி வைத்து ஆட்சியர் பேசியதாவது: தமிழகத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியரின் உயர் கல்விக்கு உதவும் வகையில், அனைத்து மாவட்டங்களிலும் கல்விக் கடன் முகாம் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் 321 மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து மொத்தம் 36,529 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்கள் உயர் கல்வியைத் தொடர பொருளாதாரம் தடையாக இருந்துவிடக் கூடாது என்பதற்காக, இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.     இந்த நிகழ்ச்சியில், முதன்மைக் கல்வி அலுவலர் ந. மாரிமுத்து, கல்லூரிக் கல்வி மண்டல இணை இயக்குநர் கே. கூடலிங்கம், முன்னோடி வங்கி மேலாளர் மு. இருளப்பன், மாவட்டக் கல்வி அலுவலர்கள் முருகேசன், கி. அமுதா, பி. செளடேஸ்வரி, மாநகராட்சி கல்வி அலுவலர் எம். ராஜேந்திரன், புனித பிரிட்டோ மேல்நிலைப் பள்ளித் தாளாளர் ஏ. சேவியர் ராஜ், தலைமை ஆசிரியர் ஏ. லூயிஸ் அமல்ராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.     இதில், பல்வேறு வங்கிகளின் பிரதிநிதிகள் பங்கேற்று மாணவர்களின் விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்தனர். இம் முகாமில், 11 கலை அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த 343 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். முதல்கட்டமாக தேர்வு செய்யப்பட்ட 5 மாணவ, மாணவியருக்கு கல்விக் கடனுக்கான ஒப்புதல் ஆணைகளை ஆட்சியர் வழங்கினார். இந்த முகாமில் மொத்தம் 100 மாணவர்களுக்கு ரூ.1.5 கோடி கல்விக் கடன் வழங்குவதற்கான ஒப்புதல் ஆணைகள் வழங்கப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com