அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு திமுக, காங்., தமாகாவினர் ஆறுதல்

தேனி மாவட்டம் குரங்கணியில் காட்டுத்தீயில் சிக்கி பலத்த காயமடைந்த நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளவர்களை

தேனி மாவட்டம் குரங்கணியில் காட்டுத்தீயில் சிக்கி பலத்த காயமடைந்த நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளவர்களை திமுக துணைப்பொதுச்செயலர் ஐ.பெரியசாமி  செவ்வாய்க்கிழமை சந்தித்து ஆறுதல் கூறினார். 
  பின்னர்  அவர் செய்தியாளர்களிடம் கூறியது: 
 குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு  உயர்தர சிகிச்சை அளிக்க வேண்டும். மலையேற்றம் செல்லும்போது போதுமான முன்னேற்பாடுகள் தேவை. மலையேற்றம் சென்றவர்களை வனத் துறையினரும் கண்காணித்திருக்க வேண்டும். 
அவ்வாறு கண்காணிப்பு இல்லாதபோது, இது போன்ற விபத்துக்களில் அரசு மீது குற்றச்சாட்டு எழுவது தவிர்க்க இயலாதது. வனத்துறையினர் விழிப்புடன் செயல்பட்டிருந்தால் விபத்தை தவிர்த்திருக்கலாம். வருங்காலங்களில் இதுபோன்ற அபாயகரமான மலைப்பகுதிகளில் மலையேற்றத்துக்கு அரசு தடை விதிக்க வேண்டும்  என்றார்.
     திமுக எம்எல்ஏக்கள் பிடிஆர். பழனிவேல் தியாகராஜன், பி.மூர்த்தி, மாவட்டச்செயலர்கள் வ.வேலுச்சாமி, கோ.தளபதி, முன்னாள் மேயர் பெ.குழந்தை வேலு, நிர்வாகி மிசா எம்.பாண்டியன் மற்றும் பலர் உடனிருந்தனர். 
காங்கிரஸ்: சிகிச்சை பெறுபவர்களை தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் செவ்வாய்க்கிழமை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:  
குரங்கணி வனப்பகுதியில் தீ விபத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு ரூ.4 லட்சம் வழங்குவதாக அறிவித்துள்ளது. இது போதாது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு குறைந்தபட்சம் தலா ரூ.10 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும். தீ விபத்தில் காயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளவர்களின் மருத்துவச் செலவுகளையும் அரசே ஏற்க வேண்டும்.  
  காயம் அடைந்தவர்களுக்கு மதுரை அரசு மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுகிறது. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.  மலையேற்ற அமைப்புகளை கண்காணிக்க வேண்டும் என்றார்.
 தமாகா: மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை தமாகா இளைஞரணி மாநிலச் செயலர் யுவராஜ் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
குரங்கணி தீ விபத்தில் காயமடைந்தவர்களுக்கு  அரசு மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சை அளித்து வந்தாலும், அவர்களை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்களின் பெற்றோர் விருப்பம் தெரிவித்துள்ளனர். 
எனவே காயமடைந்தவர்களை  தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று அரசு சார்பில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்றார். முன்னாள் எம்பி ஏ.ஜி.எஸ். ராம்பாபு மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com