காட்டுத் தீயில் சிக்கியவர்களை மீட்ட 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு பாராட்டு

தேனி மாவட்டம், குரங்கணியில் காட்டுத் தீ எரிந்தபோதும்  உயிரை பணயம் வைத்து சம்பவ இடத்துக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்ட  108 ஆம்புலன்ஸ்

தேனி மாவட்டம், குரங்கணியில் காட்டுத் தீ எரிந்தபோதும்  உயிரை பணயம் வைத்து சம்பவ இடத்துக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்ட  108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் இருவர் மதுரை அரசு மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை கௌரவிக்கப்பட்டனர்.
  குரங்கணி கொழுக்குமலைக்கு மலையேற்றம் சென்றவர்கள் காட்டுத் தீயில் சிக்கியபோது, அதில் சிக்கிய  நிவேதா என்ற பெண் 108 அவசர உதவி மையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்பேரில் போடி மற்றும் தேனியில் இருந்து இரண்டு  108 ஆம்புலன்ஸ் வாகனங்களில் சென்ற முதலுதவி பணியாளர்கள் செல்வம், ஜெகதீசன் ஆகிய இருவரும்  தங்கள் உயிரை பணயம் வைத்து காட்டுத் தீ பரவிய பகுதிக்கு துணிச்சலுடன் சென்று காயமடைந்தவர்களுக்கு முதலுதவி அளித்துள்ளனர். மேலும் அங்கு எரிந்துகொண்டிருந்த காட்டுத் தீயை படம் பிடித்தும் அனுப்பியுள்ளனர். அவர்களது முயற்சியால் பலர் காப்பாற்றப்பட்டனர்.  
  அவர்களது பணியை அறிந்த சுகாதாரத்துறை செயலர் ஜெ. ராதாகிருஷ்ணன், ஆம்புலன்ஸ் பணியாளர்கள் இருவரையும் மதுரை அரசு மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை பாராட்டி கௌரவித்தார்.
  மீட்புப் பணி தொடர்பாக செல்வம், ஜெகதீசன் ஆகியோர் கூறியது: 
  மலையேற்றத்துக்கு சென்றவர்கள் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் அங்கிருந்து புறப்பட்டு வந்துள்ளனர். பிற்பகல் 2 மணியளவில் மதிய உணவுக்காக ஒத்தமரம் என்ற பகுதியில் தங்கியபோது அங்கு காட்டுத் தீ கீழிருந்து மேலாக பரவியுள்ளது. அப்போது அவர்களுடன் வழிகாட்டியாக வந்தவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 
இதனால் அவருடன் குழந்தைகள் உள்பட பலர் மாற்றுப்பாதையில் சென்று தீயில் இருந்து தப்பியுள்ளனர். மற்றவர்கள் தங்களது உடைமைகளை எடுத்துக் கொண்டு செல்வதற்குள் தீ பரவியுள்ளது. இதனால் பதற்றத்தில் அப்பகுதியில் உள்ள பள்ளத்தில் இறங்கியுள்ளனர். ஆனால் பள்ளத்தை சுற்றியும் தீ பரவியதால் அனைவரும் தீயில் சிக்கி கொண்டனர் . 
இதுதொடர்பாக பிற்பகல் 3.15 மணிக்கு கட்டுப்பாட்டு அறையில் இருந்து தகவல் கிடைத்தை அடுத்து போடி, தேனியில் இருந்து இரண்டு ஆம்புலன்ஸ் வாகனங்களில் சென்றோம். எங்களுடன் ஸ்ரீதேவி என்ற பெண் பணியாளரும் உடன் வந்தார். மலைப்பகுதியில் வாகனத்தை நிறுத்தி விட்டு மலைப்பாதையில் சென்றபோது அங்கு மாற்றுப்பாதை வழியாக  வந்தவர்களை மீட்டு பெண் பணியாளருடன் அனுப்பினோம். மீட்கப்பட்டவர்கள் எங்களிடம் மலையில் பலர் இருப்பதாகவும் தீயில் சிக்கியதாகவும் தெரிவித்தனர். 
இதனால் மலைக்கு மேலே தீ எரிந்துகொண்டிருந்தபோதும் செங்குத்தான மலைக்கு நடந்து சென்றோம். முதலுவி மருந்துகள், குளுக்கோஸ் மற்றும் தண்ணீர் ஆகியவற்றையும் கொண்டு சென்றோம். மலையில் பள்ளத்தாக்குகள் இருப்பதால் ஆள்கள் இருந்தாலும் தெரியாது. இதனால் குரல் கொடுத்துக்கொண்டே சென்றோம். அப்போது பள்ளத்தாக்கு பகுதியில் கற்கள் உருளும் சப்தம் மற்றும் அழுகுரல் சப்தம் கேட்டு குரல் கொடுத்துக்கொண்டே சென்றோம். 
பள்ளத்தாக்கு பகுதிக்கு சென்றபோது அங்கு பலர் பாறைகளுக்கு இடையே பலத்த தீக்காயங்களுடன் இருந்தனர். அவர்களை மீட்டு ஒரே இடத்தில் அமர வைத்து உடனடியாக மாவட்ட ஆட்சியருக்கு தகவல் அளித்தோம்.  தீயில் சிக்கியவர்கள் பலரின் உடைகள் கருகியதால் மலைக்கிராம மக்கள் அவர்களுக்கு உடைகள் வழங்கினர். மேலும் தேனி ஆட்சியரும் போர்வைகள் ஏற்பாடு செய்து மலைக்கு கொடுத்தனுப்பினார்.  
   பின்னர் காயமடைந்தவர்களை ஹெலிகாப்டர் மூலம் தான் மீட்க முடியும் என்ற நிலை இருந்ததால்  ஹெலிகாப்டருக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.  ஆனால் ஹெலிகாப்டர் இறங்குவதற்குரிய இடம் எதுவும் இல்லாததால் ஹெலிகாப்டர் திரும்பிச் சென்றது. இதையடுத்து உயிரிழந்தவர்களை விட்டுவிட்டு காயமடைந்தவர்களை போர்வைகள் மூலம் தொட்டில் கட்டி போலீஸார் மூலம் மூன்று மணி நேரம் நடந்தே தூக்கிச்சென்று வாகனங்களுக்கு கொண்டு சென்றோம். அதிகாலை வரை மீட்புப் பணிகள் தொடர்ந்தன. விடிந்தபிறகு ஹெலிகாப்டர்கள் மலைப்பகுதிக்கு வந்தது. அதில் சடலங்கள் கொண்டு செல்லப்பட்டன. மாவட்ட நிர்வாகம் துரித ஏற்பாடுகள் செய்ததால் பலரையும் அங்கிருந்து மீட்க முடிந்தது என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com