மீனாட்சியம்மன் கோயில் நிலம் 50 ஏக்கர் போலி ஆவணங்கள் மூலம் விற்பனை: திருத்தொண்டர்கள் சபை புகார்

மதுரை மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பேருந்து நிலையம் எதிரே மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலுக்குச் சொந்தமான பல ஆயிரம் கோடி ரூபாய்

மதுரை மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பேருந்து நிலையம் எதிரே மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலுக்குச் சொந்தமான பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் போலி ஆவணங்கள் மூலமாக விற்பனை செய்யப்பட்டுள்ளதாக  தமிழ்நாடு திருத்தொண்டர்கள் சபை புகார் தெரிவித்துள்ளது.
 மதுரை மாவட்டம் வடக்கு வட்டம் மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பேருந்து நிலையம் எதிரே சுமார் 50 ஏக்கர் நிலம், சூறாவளி சுப்பையர் என்பவரால் மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலுக்கு வழங்கப்பட்டுள்ளது. கோயிலில் நடைபெறும் பூஜைகள், திருவிழா, உற்சவங்களுக்காக இந்த நிலம் வழங்கப்பட்டுள்ளது. இவை சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்டு வருவதாக தமிழ்நாடு திருத்தொண்டர்கள் சபை புகார் தெரிவித்துள்ளது.
 திருத்தொண்டர்கள் சபை நிறுவனர் மற்றும் தலைவர் ஆ.ராதாகிருஷ்ணன் தலைமையில் சபையினர் ஆக்கிரமிப்புக்குள்ளான நிலங்களை வியாழக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.  
மதுரை வடக்கு வட்டாட்சியர் சிவக்குமார் மற்றும் வடக்கு வட்ட வருவாய்த் துறை அலுவலர்கள்,  இந்து சமய அறநிலையத்துறை கோயில் நிலங்களுக்கான வட்டாட்சியர் சிவக்குமார்,  நிலஅளவை ஆய்வாளர்கள் உடன் இருந்தனர். 
சம்பந்தப்பட்ட சர்வே எண்களுக்கு உரிய  வரைபடங்கள் உள்ளிட்ட நில ஆவணங்கள் மூலமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்ட நிலங்கள் ஆய்வு செய்யப்பட்டன.
 பின்னர் வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் திருத்தொண்டர்கள் சபையினர்,  மேற்படி தனியார் ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்கள் கோயிலுக்குச் சொந்தமானவை என்பதற்கான 902  பத்திர ஆவணங்கள், 85 தீர்ப்பு நகல்களை வருவாய்த் துறை முன்னிலையில் மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் அலுவலர்களிடம் ஒப்படைத்தனர்.
 இதுகுறித்து திருத்தொண்டர்கள் சபை தலைவர் ஆ.ராதாகிருஷ்ணன் கூறியது:
 மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரே சுமார் 50 ஏக்கர் கோயில் நிலம் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டுள்ளது. கோயில்களுக்குரிய எந்தவொரு தர்ம சாசன 
சொத்துக்களாக இருந்தாலும்,  அதை விற்பனை செய்ய இந்து 
சமய அறநிலையத் துறை ஆணையருக்கு விண்ணப்பித்து, பகிரங்க 
விசாரணை மற்றும் செய்தித்தாள்களில் விளம்பரம் செய்த பிறகே விற்பனை நடைமுறையை தொடர முடியும்.  
ஆனால், போலி ஆவணங்களைப் பயன்படுத்தி சொத்துகள் அபகரிக்கப்பட்டுள்ளது.  இதுபற்றி கோயில் நிர்வாகம் எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
 கோயில் நிலம் என்பதற்கான ஆவணங்களை ஒப்படைத்துள்ளோம். இதன் பிறகாவது இந்து சமய அறநிலையத் துறையினர் உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com