சர்கார் திரைப்படத்துக்கு எதிர்ப்பு: மதுரையில் திரையரங்கு முன் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

சர்கார் திரைப்படத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து மதுரையில் அதிமுக எம்எல்ஏ வி.வி.ராஜன்செல்லப்பா தலைமையில்

சர்கார் திரைப்படத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து மதுரையில் அதிமுக எம்எல்ஏ வி.வி.ராஜன்செல்லப்பா தலைமையில் அக்கட்சியினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நடிகர் விஜய் கதாநாயகனாக நடித்துள்ள சர்கார் திரைப்படம் தீபாவளியன்று திரைக்கு வந்துள்ளது. இதில் இடம்பெறும் அரசியல் வசனங்கள் ஆளும் அதிமுக அரசு மீதும்,  முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்தும் அவதூறு பரப்பும் வகையில் இருப்பதாக அக்கட்சியினர் கூறி வருகின்றனர். தமிழக அமைச்சர்கள் பலரும், இந்த திரைப்படத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மதுரை அண்ணாநகரில் உள்ள சினிப்பிரியா திரையரங்கின் முன்பு,  மதுரை வடக்கு சட்டப்பேரவை உறுப்பினர் வி.வி.ராஜன்செல்லப்பா தலைமையில், மதுரை மாநகர் மாவட்ட அதிமுக அவைத் தலைவர் கே.துரைப்பாண்டியன், துணைச் செயலர் சி.தங்கம், பொருளாளர் பா.ராஜா, எம்ஜிஆர் மன்ற துணைத் தலைவர் எம்.எஸ்.பாண்டியன், வழக்குரைஞர் ரமேஷ், முன்னாள் துணை மேயர் கு.திரவியம் உள்ளிட்ட ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
  இதில், அதிமுக அரசு குறித்தும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்தும் அவதூறான காட்சிகளை நீக்க வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். அப்போது திரையரங்கில் பகல் காட்சி திரையிடப்பட்டிருந்தது. இந்நிலையில், அதிமுகவினர் போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் எம்எல்ஏ ராஜன்செல்லப்பா தலைமையில் கட்சி நிர்வாகிகள், திரையரங்க அலுவலகத்துக்குச் சென்று மேலாளரிடம்,  சர்கார் திரைப்படம் திரையிடுவதை நிறுத்துமாறு வலியுறுத்தினர். மேலும் தாங்கள் குறிப்பிடும் அவதூறான காட்சிகளை நீக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.  தற்போது திரையிடப்பட்டுள்ள காலை காட்சி சற்றுநேரத்தில் முடிந்துவிடும் என்றும், அடுத்த காட்சியை ரத்து செய்வதாகவும் திரையரங்க அலுவலர்கள் தெரிவித்தனர். அதன் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திரையரங்கில் இருந்து வெளியேறினர்.
காட்சி நேரம் மாற்றம்:    அதிமுகவினரின் போராட்டம் காரணமாக,  பகல் 
2 மணி காட்சி ரத்து செய்யப்பட்டு, மாலை 4.30 காட்சியாக திரையிடப்பட்டது. மேலும் சர்கார் திரைப்படம் திரையிடப்பட்டுள்ள பிற திரையரங்குகளிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com