6 கிலோ தங்க நகைகள் மோசடி நகைக்கடை உரிமையாளர் கைது

மதுரையில் 13 பேரிடம் ரூ.1 கோடி மதிப்புள்ள 6 கிலோ நகைகளை வாங்கி மோசடி செய்த நகைக்கடை உரிமையாளரை

மதுரையில் 13 பேரிடம் ரூ.1 கோடி மதிப்புள்ள 6 கிலோ நகைகளை வாங்கி மோசடி செய்த நகைக்கடை உரிமையாளரை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
    மதுரை விளாச்சேரியைச் சேர்ந்தவர் ரிச்சர்ட் லாரன்ட். இவர் தங்க நகைகளை ஆர்டர்களின்பேரில் செய்து தமிழகம் முழுவதும் உள்ள நகைக்கடைகளுக்கு விற்பனை செய்து வருகிறார். மதுரை சொக்கப்பன் நாயக்கன் தெருவில் நகைக்கடை நடத்தி வரும்  கணேசன் என்ற விக்னேஷ் (38), ரிச்சர்ட் லாரண்ட்டிடம் அடிக்கடி நகை வாங்கியுள்ளார். இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் ஆடிப்பெருக்கை முன்னிட்டு கணேசன் தனது நகைக்கடையில் விற்பனைக்கு அதிக நகைகள் தேவைப்படுவதாக ரிச்சர்ட் லாரண்டிடம் கேட்டுள்ளார். ஏற்கெனவே இருந்த அறிமுகத்தின்பேரில் கணேசனுக்கு 480 கிராம் எடையுள்ள ஹால்மார்க் தங்க நகைகளை ரிச்சர்ட் லாரண்ட் கொடுத்துள்ளார். இதில் சில நாள்கள் கழித்து நகைக்கான பணம் ரூ.13.58 லட்சத்தை வாங்குவதற்காக ரிச்சர்ட் லாரண்ட், கணேசனின் நகைக்கடைக்கு சென்றுள்ளார். அப்போது நகைகளுடன் கணேசன் தலைமறைவாகியது தெரிய வந்தது. இதுதொடர்பாக ரிச்சர்ட் லாரண்ட் அளித்தப்புகாரின்பேரில் மதுரை மாநகர் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து கணேசனை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் கணேசன்  13 பேரிடம் ரூ.1 கோடி மதிப்புள்ள 6 கிலோ தங்க நகைகளை வாங்கி பணம் தராமல் மோசடி செய்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸார் கணேசனை வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com