நேர்காணல் முடிந்து ஓராண்டாகியும் தாமதமாகும் நியமனம்: மனஉளைச்சலில் அங்கன்வாடி பணியாளர்கள்

மதுரை மாவட்டத்தில் அங்கன்வாடி மையங்களில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக

மதுரை மாவட்டத்தில் அங்கன்வாடி மையங்களில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக இருப்பதால்,  கூடுதல் பணிச்சுமை காரணமாக அங்கன்வாடி பணியாளர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
 மதுரை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின்கீழ் ஊரகப் பகுதியில் 13 ஒன்றியங்கள், நகரப் பகுதியை உள்ளடக்கிய 4 ஒன்றியங்கள் என 17 ஒன்றியங்களில் மொத்தம் 2001 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றுக்கு தலா ஒரு அங்கன்வாடிப் பணியாளர் மற்றும் உதவியாளர் பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மையத்திலும் நகரப் பகுதியாக இருப்பின் 15 குழந்தைகள் வரையிலும், கிராமப்புறங்களில் அதிகபட்சமாக 30 குழந்தைகள் வரையிலும் பராமரிக்கப்படுகின்றனர். இம்மையத்தில் குழந்தைகளுக்கு இணை உணவு, மதிய உணவு வழங்கப்படுகிறது. மழலையர் பள்ளி போன்று முன்பருவக் கல்வியாக விளையாட்டு முறை கல்வியும் கற்பிக்கப்படுகிறது. 
 இம்மையங்களுக்கு வரும் குழந்தைகள் மட்டுமின்றி,  அந்த மையத்துக்குள்பட்ட பகுதியைச் சேர்ந்த குழந்தைகளின் எடையளவு சரிபார்த்தல், சராசரிக்கும் குறைவாக எடையளவு உள்ள குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களுக்கு இணை உணவு வழங்குதல் மற்றும் இளம்பெண்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், முதியோர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கும் இணை உணவு வழங்குதல் ஆகியவையும் அவர்களது முக்கியப் பணிகளாக உள்ளன. அத்துடன் ஒவ்வொருவருக்கும் தனித்தனி குறிப்பேடுகளையும் அவர்கள் தயாரிப்பதுடன், அரசின் பல்வேறு திட்ட செயல்பாடுகளிலும்  ஈடுபடுத்தப்படுகின்றனர். 
அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும்  உதவியாளர்கள் ஓய்வு பெறுவது அல்லது பிற காரணங்களுக்காக காலிப் பணியிடம் உருவாகும் போது மாவட்ட அளவில் அந்தந்த ஒன்றியங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு ஆட்சியர் தலைமையிலான குழு பணியாளர்களைத் தேர்வு செய்யும். இதில் மதுரை மாவட்டத்தில் காலிப்பணியிடங்கள் நீண்ட காலமாக பூர்த்தி செய்யப்படாததால் அதன் எண்ணிக்கை உயர்ந்துவிட்டது. மாவட்டத்தில் உள்ள 2001 அங்கன்வாடி மையங்களில் 901 மையங்களுக்கு மட்டுமே பணியாளர்கள் உள்ளனர். 1,330 உதவியாளர்கள் தான் பணியில் உள்ளனர்.
 ஒரு பணியாளருக்கு ஒரு மையம் என்ற நிலை இருந்தால், மேற்குறிப்பிட்ட பணிகளைச் செய்வதில் எப் பிரச்னையும் எழாது. காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க பணியில் இருக்கும் அங்கன்வாடிப் பணியாளர்களுக்கு கூடுதல் பொறுப்பாக ஒதுக்கப்படும் மையங்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. சில ஒன்றியங்களில் ஒரே பணியாளருக்கு 3 மையங்கள் வரை  பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
 இதனால், மூன்று மையங்களுக்கும் சென்று பணியாற்றும் போது அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் காலியிடங்களைப் பூர்த்தி செய்ய கடந்த 2017 செப்டம்பரில் நேர்காணல் நடத்தப்பட்டது. ஆனால், ஓராண்டு முடிந்த நிலையில் இன்னும் அவை பூர்த்தி செய்யப்படவில்லை.  அரசியல் தலையீடு இருப்பதால், இந்த நியமனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்பட்ட நிலையில் அங்கன்வாடிப் பணியாளர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். முந்தைய ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் இருந்தபோது, இதுகுறித்து தொடர்ந்து முறையிட்டும் காலிப்பணியிடம் நியமனம் தாமதமாகி வந்தது.
 இந்நிலையில், தற்போது 30-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள், கிராம சுகாதார செவிலியர் பயிற்சிக்கு சென்றுள்ளனர். இதனால் ஏற்கெனவே 3 மையங்கள் வரை கவனித்தவர்களுக்கு மேலும் கூடுதல் மையங்கள் ஒதுக்குவது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
 இதுகுறித்து அங்கன்வாடிப் பணியாளர்கள் கூறியது: நேர்காணல் நடப்பதற்கு ஓராண்டுக்கு முன்பிருந்தே காலியிடங்கள் இருந்தன. இருப்பினும் பணிநியமனத்துக்குத் தொடர்ந்து தாமதம் செய்து வருகின்றனர். சில மையங்களில் பணியாளர், உதவியாளர் என இரு பணியிடமும் காலியாக உள்ளது. எனவே அருகில் உள்ள மையத்தில் இருந்து தான் உணவு சமைத்து கொண்டு செல்ல வேண்டும். அதுவரை அந்த மையத்தை பொதுமக்கள் தான் யாரேனும் பார்த்துக் கொள்ளும் நிலை உள்ளது. இச்சூழலில் ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்தால் அங்கன்வாடிப் பணியாளரை பொறுப்பாக்குகின்றனர். இதுபோன்ற காரணங்களால் நாங்கள் பெரும் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம். ஆகவே, போராட்டங்களைத் தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளோம் என்றனர்.
 இதுபற்றி ஆட்சியர் அலுவலக அதிகாரிகளிடம் கேட்டதற்கு, அங்கன்வாடி பணியாளர்கள் நியமனம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் காலிப் பணியிடங்கள் பூர்த்தி செய்யப்படும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com