"கல்வியில் மதுரையை முதலிடமாக்குவதே லட்சியம்'

கல்வி,  சுகாதாரம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் மதுரை மாவட்டத்தை முதன்மை மாவட்டமாக மாற்றுவதே லட்சியம் என மாவட்ட ஆட்சியர் ச.நடராஜன் கூறினார். 

கல்வி,  சுகாதாரம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் மதுரை மாவட்டத்தை முதன்மை மாவட்டமாக மாற்றுவதே லட்சியம் என மாவட்ட ஆட்சியர் ச.நடராஜன் கூறினார். 
 மதுரை தமுக்கத்தில் பபாசி சார்பில் 13 ஆவது புத்தகத் திருவிழா நிறைவு நாள் நிகழ்ச்சி திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. 
   புத்தகத் திருவிழாவில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு நடைபெற்ற ஓவியம், பேச்சு, கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளித்தும், நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தும் ஆட்சியர் ச.நடராஜன் பேசியது:
 புத்தகங்களை இணையத்தில் வாசிப்பது முழுத் திருப்தியைத் தராது. ஆகவே இலக்கியங்கள் உள்ளிட்ட கருத்துகளை அச்சு வடிவிலான புத்தகங்களில் படிப்பதே சிறந்தது. புத்தக வாசிப்பே நம்மை உயர்த்தும் என்பதை மாணவர்கள் உணரவேண்டும். தற்போது மாணவர்கள் செல்லிடப் பேசிகளை பயன்படுத்துவதிலேயே அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
 வாசிப்பினால் மட்டுமே மன அமைதியைப் பெறமுடியும். வெளிநாட்டவர் அமைதியைத் தேடி நம் நாட்டுக்கு வரும் நிலையில், நாமோ வெளிநாட்டவர் போன்ற பரபரப்பான வாழ்க்கையை விரும்புவது சரியல்ல. 
 சுவாமி விவேகானந்தர் கூறியது போல சாதிக்க நினைத்ததை மனம் ஒன்றிச் செய்தால் வெற்றி பெறலாம். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் கூறியதுபோல, மிகப்பெரிய லட்சியத்தை கனவாக்கி, அதை அடைய தொடர்முயற்சியில் ஈடுபடுவதே வெற்றியைத் தரும்.
 மதுரை மாவட்டத்தை கல்வி, சுகாதாரம், விவசாயம் என அனைத்து துறைகளிலும் முதன்மை மாவட்டமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த லட்சியத்தில் நிச்சயம் வெற்றி பெறுவோம். அதற்கான மாற்றத்தை விரைவில் காணலாம் என்றார். 
 நிகழ்ச்சியில், "மக்கள் உயர்வுக்கு புத்தகங்கள்" எனும் தலைப்பில் பேராசிரியர் மு.அருணகிரி பேசியதாவது:   நல்ல புத்தகங்களை வாசிக்கும் வகையில் மாணவர்களுக்கு ஆசிரியர்களே வழிகாட்டிகளாக இருக்க வேண்டும். புத்தகங்களுக்கான முதலீடு விதை நெல்லுக்கான முதலீடாகவே கருதப்படும். மதவாதிகளுக்கு மந்திரச் சொற்கள் போல லட்சியவாதிகளுக்கு புத்தகம் என்பதும் மந்திரச்சொல்லாக அமையும் என்றார்.
 நிறைவு உரையாக தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ம.திருமலை பேசியது: வாழ்க்கையில் நாம் அனுபவம் பெறாத பக்கங்களை நமக்கு காட்டுபவை புத்தகங்கள் தான். நமது தன்முனைப்பு குணத்தை உணர்த்தி, நம்மை உயர்த்துபவை புத்தகங்களே என்றார்.
 நிகழ்ச்சியில், போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகளும் பேசினர். ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் செந்தூரான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பபாசி செயலர் ஏ.ஆர்.வெங்கடாசலம் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com