பாண்டித்துரை தேவரின் தமிழ்ச் சங்கத்தை போற்றி பாதுகாக்க வேண்டும்: பழ.நெடுமாறன் வலியுறுத்தல்

மதுரையில் பாண்டித்துரைத் தேவர் தோற்றுவித்த நான்காம் தமிழ்ச்சங்கத்தை போற்றிப் பாதுகாக்க வேண்டும் என

மதுரையில் பாண்டித்துரைத் தேவர் தோற்றுவித்த நான்காம் தமிழ்ச்சங்கத்தை போற்றிப் பாதுகாக்க வேண்டும் என தமிழர் தேசிய முன்னணித் தலைவர் பழ.நெடுமாறன் வலியுறுத்தினார்.
  மதுரை நான்காம் தமிழ்ச்சங்கத்தின் 118 ஆவது ஆண்டு விழா, செந்தமிழ்க் கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சங்கத்தின் செயலர் வழக்குரைஞர் ச.மாரியப்பமுரளி தலைமை வகித்தார். தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்கள் இ.சுந்தரமூர்த்தி, ம.திருமலை மற்றும் செந்தலைகெளதமன் ஆகியோர், "நான்காம் தமிழ்ச்சங்கம் தோற்றமும், ஏற்றமும்' எனும் தலைப்பில் கருத்துரையாற்றினர்.
  நிகழ்ச்சியில் பழ.நெடுமாறன் ஆற்றிய சிறப்புரை:
 வள்ளல் பாண்டித்துரைத் தேவர் வாழ்ந்த காலத்தில் பல சிற்றரசர்கள் ஆங்கிலேய அதிகாரிகளுக்கு விருந்து வைத்தும், வேட்டையாடியும், கேளிக்கைகளில் ஈடுபட்டனர். ஆனால், பொன்.பாண்டித்துரைத் தேவர் மட்டுமே தமிழ் வளர்ச்சி குறித்து சிந்தித்து தமிழ்ச் சங்கம் அமைத்தார். மதுரையில் அவர் தமிழ்ச் சங்கம் அமைத்ததால் தான் தமிழ் வளர்ந்தது, தமிழிசை சங்கம் பிறந்தது. 
 தமிழ்ச் சங்கத்தில் பல அரிய தமிழ் நூல்களைச் சேகரித்ததுடன், நூலகம் அமைத்து தமிழ் ஆய்வுக்கும், அச்சகம் அமைத்து செந்தமிழ் இதழுக்கும் வழி ஏற்படுத்தினார்.  தமிழ் மாணவர்கள் தமிழைக் கற்க செந்தமிழ் கலாசாலையை நிறுவினார். உ.வே.சா., கார்மேகக் கோனார் போன்ற பெரும் தமிழ்ப்புலவர்கள் உருவான மதுரை தமிழ்ச்சங்கத்தால் வெளியிடப்பட்ட செந்தமிழ் இதழ், முனைவர் பட்டம் பெறுவோருக்கு சுரங்கமாக அமைந்தது.  
 பாண்டித்துரைத் தேவரால் உருவாக்கப்பட்ட மதுரை தமிழ்ச்சங்கத்தை போற்றிப்பாதுகாக்கும் பொறுப்பு அனைவருக்கும் உள்ளது என்றார்.
 முன்னதாக பாண்டித்துரைத் தேவரின் திருவுருவப் படத்துக்கு மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது. மாலையில் நடந்த நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் ம.பெ.சீனிவாசன், சதாசிவன் உள்ளிட்டோர் பேசினர். நிகழ்ச்சிகளில் புரட்சிக்கவிஞர் மன்றத்தலைவர் பி.வரதராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். செந்தமிழ்க் கல்லூரி முதல்வர் கி.வேணுகா வரவேற்றார். துணை முதல்வர் ரேவதி சுப்புலட்சுமி ஒருங்கிணைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com