வெளிநாடு வாழ் இந்தியரிடம் ரூ.1.59 கோடி மோசடி: கணவர், மனைவி, மகன் கைது

மதுரையில் நிலம் வாங்கித் தருவதாக வெளி நாடு வாழ் இந்தியரிடம் ரூ.1.59 கோடி மோசடி செய்த

மதுரையில் நிலம் வாங்கித் தருவதாக வெளி நாடு வாழ் இந்தியரிடம் ரூ.1.59 கோடி மோசடி செய்த புகாரின்பேரில் மூவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
      மதுரையை பூர்வீகமாகக் கொண்டவர்  ராஜமாணிக்கம் பாஸ்கர்(56). ஆப்பிரிக்காவில் உள்ள போட்ஸ்வானா நாட்டின் குடியுரிமை பெற்று அங்கு தொழில் நடத்தி வருகிறார். மேலும் மதுரையில் உள்ள அரசு வங்கிக்கிளையில் தனது பெயரிலும், மனைவி விசாலாட்சி பெயரிலும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் சேமிப்புக் கணக்கை வைத்துள்ளார். வங்கிக்கணக்கு பரிவர்த்தனை தொடர்பாக வங்கிக்கிளை மேலாளர் நல்லபெருமாளிடம் அடிக்கடி பேசி வந்துள்ளார். அப்போது நல்லபெருமாள் தங்கள் வங்கியில் அடமானம்  உள்ள ரூ.30 லட்சம் மதிப்புள்ள சொத்து ரூ.20 லட்சத்துக்கு விலைக்கு வருவதாகக்கூறி,  நிலத்தின் உரிமையாளர்கள் என  சிம்மக்கல்லைச் சேர்ந்த  மீனாட்சி சுந்தரம்,அவரது மனைவி பராசக்தி, மகன் பாலாஜி வெங்கடேசன் ஆகியோரை அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
இதையடுத்து ராஜமாணிக்கம் பாஸ்கரிடம்  ரூ.20 லட்சத்தை மூன்று பேரும் பெற்று கொண்டு, ராஜமாணிக்கம் பாஸ்கர் மற்றும் அவரது  மனைவி விசாலாட்சி ஆகியோர்  பெயரில் பத்திரம் பதிந்துள்ளனர்.  மேலும் நிலத்தைச்சுற்றி காம்பவுண்ட் சுவர் எழுப்ப ராஜமாணிக்கம் பாஸ்கரிடம் பூர்த்தி செய்யப்படாத இரண்டு  காசோலைகளை, நல்லபெருமாள் வாங்கியுள்ளார். இந்நிலையில் கடந்த 2016-இல் ராஜமாணிக்கம் பாஸ்கரன் தான் வாங்கிய நிலத்தை உறவினர்கள் மூலம் நேரில் சென்று பார்த்தபோது பத்திரத்துக்கும், நிலத்துக்கும் சம்பந்தமில்லை என்றும் போலியான ஆவணங்களை தயார் செய்து கிரைய பத்திரம் செய்து கொடுத்ததும் தெரியவந்தது. மேலும் வங்கிக்கிளை மேலாளரிடம் கொடுத்த இரண்டு காசோலைகளை பயன்படுத்தி தனது வங்கி கணக்கிலிருந்து  ரூ. 1.25 கோடி,   தனது மனைவியின் வங்கி கணக்கிலிருந்து ரூ. 34.51 லட்சத்தையும் கிளை மேலாளர் நல்ல பெருமாள் கையாடல் செய்து பாலாஜி வெங்கடேசன் வங்கி கணக்குக்கு மாற்றி மோசடி செய்தது தெரிய வந்தது. சம்பவம் தொடர்பாக ராஜமாணிக்கம் பாஸ்கர் மதுரை மாநகரக்காவல் ஆணையருக்கு மின்னஞ்சல் மூலம்  வியாழக்கிழமை புகார் தெரிவித்தார். அதன்பேரில் மதுரை மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து நில உரிமையாளர்கள் போல நடித்த பராசக்தி, பாலாஜி, மீனாட்சிசுந்தரம் ஆகிய  மூவரையும் கைது செய்தனர். மேலும் வங்கிக்கிளை மேலாளர் நல்லபெருமாளைத் தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com