குறைந்து வரும் பெரியாறு-வைகை நீர்மட்டம்: நெல் சாகுபடிக்கு முழுமையாக தண்ணீர் கிடைக்குமா?

நெல் சாகுபடிக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பெரியாறு மற்றும் வைகை அணைகளின் நீர்மட்டம் வேகமாகக் குறைந்து வருவது விவசாயிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


நெல் சாகுபடிக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பெரியாறு மற்றும் வைகை அணைகளின் நீர்மட்டம் வேகமாகக் குறைந்து வருவது விவசாயிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்தின் இருபோக பகுதிகளில் குறுவை நெல் சாகுபடி சுமார் 45 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ளது. தற்போதுள்ள சூழலில் இப்பகுதிக்கு இன்னும் குறுகிய நாள்களுக்கு மட்டுமே தண்ணீர் தேவைப்படும் என்பதால், அறுவடைக்கு பாதிப்பு இருக்காது.
ஆனால், கடந்த பல ஆண்டுகளாக மதுரை மாவட்டத்தின் ஒருபோக சாகுபடி பகுதிக்கு குறிப்பிட்ட காலத்தில் பாசனத்துக்கு தண்ணீர் கிடைக்காத நிலை இருந்து வருகிறது. பருவமழையும் இல்லாமல், அணையில் இருந்தும் தண்ணீர் கிடைக்காமல் கடந்த சில ஆண்டுகளாக ஒருபோக பாசனப் பகுதியான மேலூர், கொட்டாம்பட்டி, திருமங்கலம், செல்லம்பட்டி வட்டாரப் பகுதிகளில் நெல் சாகுபடி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
நிகழாண்டில் தென்மேற்குப் பருவமழையால் பெரியாறு அணையின் நீர்மட்டம் 140 அடியை எட்டியது. இதையடுத்து, நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒருபோக சாகுபடி பகுதிக்கு ஆகஸ்ட் 20 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. அணையில் நீர் இருப்பின் அடிப்படையில் 120 நாள்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதையடுத்து, மேற்குறிப்பிட்ட வட்டாரங்களில் சுமார் ஒரு லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடிக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பாசனக் கால்வாயில் தண்ணீர் திறப்பதற்கு முன்பே சொந்த நீர் ஆதாரங்கள் மூலமாக நாற்றங்கால் தயாரித்து வைத்திருந்த விவசாயிகள், தற்போது நடவை முடித்துவிட்டனர்.
கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்ட பிறகு விதைப்புப் பணியைத் தொடங்கியவர்கள், தற்போது நாற்றங்கல் தயாரித்து நடவுக்குத் தயாராகி வருகின்றனர். அதேநேரம், திருமங்கலம் கால்வாய்க்கு உள்பட்ட செல்லம்பட்டி வட்டாரத்தில் பல பகுதிகளில் தற்போதுதான் உழவுப் பணியே நடைபெற்று வருகிறது.
அத்துடன், பெரியாறு பிரதானக் கால்வாயின் கடைமடையில் இருக்கும் நிலங்களுக்கு இன்னும் தண்ணீர் சென்று சேரவில்லை. இந்நிலையில், பெரியாறு-வைகை அணைகளின் நீர்மட்டம் மளமளவென குறைந்து வருவது விவசாயிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து மேலூர் பிரதானக் கால்வாய் விவசாயிகள் சங்க நிர்வாகி பழனிசாமி கூறியது: மேலூர் பிரதானக் கால்வாயின் கடைமடைப் பகுதியான கட்டையம்பட்டி, திருவாதவூர், கொட்டகுடி, அம்பலகாரன்பட்டி, கீழவளவு, குறிச்சிப்பட்டி ஆகிய பகுதிகளுக்கு இன்னும் சரியாக தண்ணீர் சென்றுசேரவில்லை.
மேலும், சிங்கம்புணரி பிரதானக் கால்வாய்க்கு பொதுப்பணித் துறையினர் இன்னும் தண்ணீர் திறக்கவில்லை. இந்த கால்வாய் மூலமாக கொட்டாம்பட்டி வட்டாரத்தில் 4 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. அதேநேரம், வழக்கமாக சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் அக்டோபரில் திறக்க வேண்டிய தண்ணீர், தற்போது திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால், அணையின் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து வருகிறது. அக்டோபரில் பருவமழை இல்லையெனில், ஒருபோக சாகுபடி விவசாயிகளின் பாசனத்துக்கு பெரும் நெருக்கடி ஏற்படும். எனவே, இதைக் கருத்தில் கொண்டு பொதுப்பணித் துறையினர் நீர்மேலாண்மையில் கவனம் செலுத்தவேண்டும் என்றார்.
பெரியாறு வைகை பாசனத் திட்டக் குழு உறுப்பினர் ஜி. முருகன் கூறியது: பெரியாறு பாசனத் திட்டத்தின் இருபோக பகுதியில் முதல்போக சாகுபடிக்கு பிரச்னை இருக்காது. ஆனால், ஒருபோக பகுதியில் இருக்கும் ஒரு லட்சம் ஏக்கர் பகுதியில் தண்ணீர் திறக்கப்பட்டதை நம்பி, விவசாயப் பணிகளைத் தொடங்கியுள்ளனர்.
குறைந்தது 120 நாள்களுக்கு தண்ணீர் தேவைப்படும் நிலையில், இதுவரை 25 நாள்களுக்குதான் வழங்கப்பட்டுள்ளது. அதிலும் கடைமடைக்கு இன்னும் தண்ணீர் சென்றுசேரவில்லை. ஆனால், வைகை ஆற்றில் குடிநீருக்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. அந்த மாவட்டங்களின் குடிநீர் தேவைக்கு தற்போது தண்ணீர் திறக்க வேண்டிய நிலை இல்லை.
அக்டோபரில் மழை தொடங்கிவிடும் என்று பொதுப்பணித் துறையினர் கூறுகின்றனர். தவறும்பட்சத்தில், விவசாயிகள் கடுமையான பாதிப்பை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com