பொலிவுறு நகர் திட்டப் பணிகள் திட்டமிட்டபடி தொடங்கப்படுமா?

மதுரை மாநகராட்சியில் பொலிவுறு நகர்த் திட்டப் பணிகள் திட்டமிட்டபடி நடப்பாண்டுக்குள் தொடங்கப்படுமா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. மேலும், மதுரை பகுதியைச் சேர்ந்த அமைச்சர்கள்,


மதுரை மாநகராட்சியில் பொலிவுறு நகர்த் திட்டப் பணிகள் திட்டமிட்டபடி நடப்பாண்டுக்குள் தொடங்கப்படுமா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. மேலும், மதுரை பகுதியைச் சேர்ந்த அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் இத்திட்டப் பணியை விரைவுபடுத்த முன்வரவேண்டும் என்றும் மக்கள் கோருகின்றனர்.
மத்திய அரசால் தேசிய அளவில் குறிப்பிட்ட நகரங்கள் பொலிவுறு நகர்த் திட்டத்தில் சேர்க்கப்பட்டு, சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இப்பட்டியலில் மதுரை மாநகராட்சியானது கடந்த 2016 ஆம் ஆண்டு இடம்பெற்றது. அதன்படி, ஆண்டுக்கு ரூ. 200 கோடி செலவில் 5 ஆண்டுகளுக்கு சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
பொலிவுறு நகர் திட்டத்துக்கான முதல் கட்டப் பணிகளுக்கு ரூ.330 கோடி நிதியும் பெறப்பட்டதாகக் கூறப்பட்டது. பணிகளுக்கான ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டன. மாநகராட்சி ஆணையர் அனீஷ்சேகர், கடந்த மார்ச் மாதமே பொலிவுறு நகர் திட்டப் பணிகள் தொடங்க உள்ளதாகக் கூறினார். ஆனால், பணிகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. பணிகளுக்கான ஒப்பந்தம் கோருவதற்கான ஒப்புதலைப் பெறுவதில் தாமதம் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில், பொலிவுறு நகர் திட்டப் பணிகளுக்கான ஒப்பந்தம் கோருதல் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, செப்டம்பர் 18 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 18 முதல் 20 ஆம் தேதி வரை பொலிவுறு நகர் திட்டப் பணிகளுக்கான ஒப்பந்தம் கோரும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், அந்த தேதிகளில் ஒப்பந்தம் கோருதல் நடைபெறுமா? அல்லது வேறு தேதிக்கு மீண்டும் மாற்றப்படுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
நகரப்பொறியாளர் இடமாற்றம் உள்ளிட்ட சில பிரச்னைகளால் ஒப்பந்தம் கோருவதற்கான கோப்புகளை தயார் செய்வதில் தாமதம் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. ஆனால், கோப்புகள் தயார் நிலையில் இருப்பதாகவே மாநகராட்சி தரப்பில் கூறப்படுகிறது. எனவே, ஒப்பந்தம் கோருவதை தள்ளிப்போடுவதற்கு வேறு காரணங்கள் உள்ளனவா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
திட்டமிட்டபடி செப்டம்பர் 18 ஆம் தேதி ஒப்பந்தம் கோருதல் நடத்தப்படாவிட்டால், 2019 ஆம் ஆண்டில் மக்களவைத் தேர்தல் முடிந்த பிறகே பணிகள் தொடங்கும் நிலை உள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆய்வு: இதனிடையே, எழுகடல் தெருவிலுள்ள ராயகோபுரத்தை ரூ.3.90 கோடியில் பொலிவுறு நகர் திட்டத்தில் நவீனப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, பணிகள் மேற்கொள்வதற்கு முன்பு அப்பகுதியில் உள்ள கடைகளை அப்புறப்படுத்துவது குறித்து ஆணையர் அனீஷ்சேகர் சனிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் இணை ஆணையர் என். நடராஜன் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.
பொலிவுறு நகர் திட்டப் பணிகளுக்கான ஒப்பந்தம் கோருவது ஏற்கெனவே தள்ளிப்போனது குறித்து ஆணையரிடம் கேட்டபோது அவர் கூறியது: ஒப்பந்ததாரர்கள் பணிகள் குறித்து சில கேள்விகளை எழுப்பினர். அதற்கு மாநகராட்சி தரப்பிலிருந்து பதில் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, பொலிவுறு நகர் திட்டத்தில் முதல்கட்டப் பணிகள் ரூ.400 கோடியில் நடப்பாண்டுக்குள் தொடங்கப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com