மதுரையில் ரூ.7 லட்சம் கள்ளநோட்டுகள் பறிமுதல்

மதுரை மாவட்டம், கருப்பாயூரணி அருகே சுமார் ரூ. 7 லட்சம் மதிப்புள்ள கள்ளநோட்டுகளை தனிப்படைப் பிரிவு போலீஸார் சனிக்கிழமை பறிமுதல் செய்து, 5 பேர் கைது செய்துள்ளனர்.

மதுரை மாவட்டம், கருப்பாயூரணி அருகே சுமார் ரூ. 7 லட்சம் மதிப்புள்ள கள்ளநோட்டுகளை தனிப்படைப் பிரிவு போலீஸார் சனிக்கிழமை பறிமுதல் செய்து, 5 பேர் கைது செய்துள்ளனர்.
மதுரை-சிவகங்கை சாலையில் உள்ள வரிச்சியூர் பகுதியில் கள்ளநோட்டுக் கும்பல் நடமாட்டம் இருப்பதாகவும், அவர்கள் கள்ளநோட்டுகளை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகவும், தனிப்படை பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதனடிப்படையில், தனிப்படைப் பிரிவு சார்பு-ஆய்வாளர் ஸ்டீபன் தலைமையில் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று, தனியார் உணவகத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் இருந்த 5 பேரை பிடித்து சோதனையிட்டனர். அதில், அவர்கள் கள்ளநோட்டுகள் வைத்திருந்தது தெரியவந்தது.
நாகர்கோவிலைச் சேர்ந்த தங்கராஜ், மதுரையைச் சேர்ந்த அர்ச்சுனன், அண்ணாதுரை, போஸ் மற்றும் ராஜாமோகன் ஆகியோரிடம் ரூ.500, ரூ.2 ஆயிரம் கள்ள நோட்டுகள் கட்டுக்கட்டாக இருந்ததை, போலீஸார் கைப்பற்றினர். அவற்றின் மொத்த மதிப்பு ரூ. 6,87,500 என்றும் தெரியவந்தது. மேலும், அவர்கள் அளித்த தகவல் அடிப்படையில், கள்ளநோட்டுகள் கைப்பற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
போலீஸாரிடம் பிடிபட்ட தங்கராஜிடம் நடத்திய விசாரணையில், அவருக்கு தூத்துக்குடியில் வீடு இருப்பது தெரியவந்தது. அங்கு நடத்திய சோதனையில், கள்ளநோட்டுகளை தயாரிக்க பயன்படுத்திய அச்சு எந்திரம், வெள்ளைத்தாள்கள், கள்ளநோட்டு பணக்கட்டுகள், கார் ஆகியன தனிப்படை போலீஸாரால் கைப்பற்றப்பட்டன.
தூத்துக்குடி பகுதியில் கள்ளநோட்டுகளைத் தயாரித்து மதுரை பகுதியில் விநியோகித்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, கள்ளநோட்டுக் கும்பலுடன் தொடர்புள்ள மற்றவர்கள் குறித்தும் தனிப்படையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மேலும், சிலரைத் தேடிவருவதாகவும் தனிப்படைப் பிரிவு போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com