மதுரையில் விநாயகர் சிலை ஊர்வலம் 200-க்கும் மேற்பட்ட சிலைகள் வைகை ஆற்றில் கரைப்பு

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, மதுரையில் இந்து முன்னணி சார்பில் 200-க்கும் மேற்பட்ட சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, வைகை ஆற்றில் சனிக்கிழமை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, மதுரையில் இந்து முன்னணி சார்பில் 200-க்கும் மேற்பட்ட சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, வைகை ஆற்றில் சனிக்கிழமை கரைக்கப்பட்டன.
விநாயகர் சதுர்த்தியையொட்டி, மதுரை நகரில் பல்வேறு இடங்களில் 300-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. இதில், இந்து இளைஞர் சேனா, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட அமைப்புகளின் சார்பில் வைக்கப்பட்டிருந்த சிலைகள் வெள்ளிக்கிழமை கரைக்கப்பட்டன.
அதையடுத்து, இந்து முன்னணி சார்பில் சனிக்கிழமை ஊர்வலம் நடத்தப்பட்டது. விளக்குத்தூண் அருகே மாலை 5 மணிக்கு தொடங்கிய இந்த ஊர்வலத்துக்கு, இந்து முன்னணியின் மாவட்டத் தலைவர் பரமசிவன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் அழகர்சாமி முன்னிலை வகித்தார். அமைப்பின் மாநில பொதுச்செயலர் முருகானந்தம் கொடியசைத்து ஊர்வலத்தை தொடக்கி வைத்தார். ஊர்வலத்தின் முன்பாக, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்திய வாகனம் மற்றும் பாதுகாப்பு வாகனங்களுடன் போலீஸார் அணிவகுத்துச் சென்றனர். இந்து முன்னணி சார்பில், 10,008 ருத்ராட்ச மாலைகளால் வடிவமைக்கப்பட்ட விநாயகர் சிலை, ஊர்வலத்தின் பிரதான வாகனமாக இருந்தது. இதைத் தொடர்ந்து, 220 விநாயகர் சிலைகள் எடுத்துச் செல்லப்பட்டன.
இதில் பங்கேற்ற ஒவ்வொரு வாகனத்துக்கும் இரு போலீஸார் பாதுகாப்புக்காக உடனிருந்தனர்.
தெற்குமாசி வீதி அருகே ஊர்வலம் வந்தபோது, அங்கிருந்த மசூதியின் முன்பாக நின்று மேள வாத்தியங்களை ஒலிக்கக்கூடாது என போலீஸார் அறிவுறுத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போலீஸாருடன் இந்து முன்னணியினர் வாக்குவாதம் செய்தனர். இதில் சமரசம் ஏற்பட்டதையடுத்து ஊர்வலம் தொடர்ந்தது.
சிறிது தொலைவு சென்றதும், மீண்டும் ஊர்வலத்தின் பின் வரிசையில் விநாயகர் சிலையை எடுத்த வந்த சிலர், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டதால், அந்த வரிசையில் வந்த வாகனங்களை போலீஸார் நிறுத்தி, சிறிது நேரம் கழித்து ஊர்வலத்தைத் தொடர அனுமதித்தனர். இதனால் ஊர்வலம் இரண்டு பிரிவாக நடைபெற்றது. இதற்கு இந்து முன்னணியினர் ஆட்சேபம் தெரிவித்து வழிநெடுகிலும் போலீஸாருக்கு எதிராக கோஷங்களை எழுப்பியபடி வந்தனர்.
இந்நிலையில், மேலமாசி வீதி மதனகோபால சுவாமி கோயில் அருகே ஊர்வலம் வந்ததும், அப்பகுதியில் உள்ள மசூதியில் தொழுகை நேரம் என்பதால் சிறிது நேரம் ஊர்வலத்தை நிறுத்திச் செல்லுமாறு போலீஸார் கூறினர். இதற்கு ஆட்சேபம் தெரிவித்த இந்து முன்னணி நிர்வாகிகள் போலீஸாருடன் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், அதே இடத்தில் அமர்ந்து மறியல் செய்தனர். இதனால், ஊர்வலம் 45 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டது.
மேலும், ஏற்கெனவே தடுத்து நிறுத்தப்பட்ட சில வாகனங்களையும் தங்களுடன் வர அனுமதித்தால் மட்டுமே ஊர்வலத்தை தொடருவோம் என இந்து முன்னணி நிர்வாகிகள் வலியுறுத்தினர். அதைத் தொடர்ந்து, அந்த வாகனங்களையும் ஊர்வலத்தில் தொடர போலீஸார் அனுமதித்தனர். அப்போது, மழை பெய்யத் தொடங்கியதை அடுத்து, கொட்டும் மழையில் விநாயகர் சிலைகள் மாசி வீதிகளில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.
ஊர்வலம் யானைக்கல் வழியாக கல்பாலத்தை அடைந்ததும், வைகையாற்றில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.
பாதுகாப்புப் பணியில், மாநகரக் காவல் ஆணையர் எஸ். டேவிட்சன் தேவாசீர்வாதம் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீஸார் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com