வைகை ஆறு, கள்ளந்திரி கால்வாய் தண்ணீரில் மூழ்கி  உயிரிழந்த மாணவர் உள்பட 2 பேரின் சடலங்கள் மீட்பு: மற்றொரு மாணவரை தேடும் தீயணைப்புப்படை

மதுரை மாவட்டத்தில்  வைகை ஆறு மற்றும் கள்ளந்திரி கால்வாயில் மூழ்கி உயிரிழந்த  மாணவர் உள்பட

மதுரை மாவட்டத்தில்  வைகை ஆறு மற்றும் கள்ளந்திரி கால்வாயில் மூழ்கி உயிரிழந்த  மாணவர் உள்பட 2 பேரின் சடலங்களை   தீயணைப்பு படையினர் ஞாயிற்றுக்கிழமை மீட்டனர். மேலும் ஆற்றில் மூழ்கிய மற்றொரு மாணவரை தொடர்ந்து தேடி வருகின்றனர்.
மதுரை மாவட்டம் சமயநல்லூர் சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்த செல்வம் மகன் சதீஸ்பாண்டி (15). சமயநல்லூரில் உள்ள பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர் சனிக்கிழமை மாலை நண்பர்களுடன் சமயநல்லூர் வைகை ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது சதீஸ்பாண்டியை தண்ணீர் இழுத்துச் சென்றது. இதுதொடர்பாக அவரது நண்பர்கள் அளித்த தகவலின்பேரில் சமயநல்லூர் போலீஸார் மற்றும் தல்லாகுளம் தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்துக்குச் சென்று சதீஸ்பாண்டியை தேடினர். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை பரவை பவர்ஹவுஸ் பின்பகுதியில் சதீஸ்பாண்டியின் சடலம் மீட்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக செல்வம் அளித்தப் புகாரின் பேரில் சமயநல்லூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மாணவரை தேடும் தீயணைப்புப்படை: மதுரை கீழ வைத்தியநாதபுரம் அன்னை தெரசா நகரைச் சேர்ந்த மீனாட்சிசுந்தரம் மகன் பாண்டீஸ் என்ற பாண்டியராஜன் (16). ஷெனாய் நகரில் உள்ள மாநகராட்சி இளங்கோ மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இவர் செல்லூர் எல்ஐசி அலுவலகம் அருகே வைகை ஆற்றில் நண்பர்களுடன் குளிக்கச் சென்றார். ஆற்றில் ஆழமான பகுதிக்குச் சென்ற பாண்டியராஜனை தண்ணீர் இழுத்துச் சென்றது. இதையடுத்து நண்பர்கள் அளித்த தகவலின் பேரில் செல்லூர் போலீஸார் மற்றும் தல்லாகுளம் தீயணைப்புப் படையினர் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கால்வாயில் சடலம்  மீட்பு:மதுரை செல்லூர் அகிம்சாபுரத்தைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி கணேஷ் (26). இவர் தனது நண்பர்களுடன் செப்டம்பர் 14-ஆம் தேதி கள்ளந்திரி கால்வாயில் குளித்துக் கொண்டிருந்த போது,  தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டார். 
இதையடுத்து கணேஷை அப்பன்திருப்பதி போலீஸார் மற்றும் தீயணைப்புப்படையினர் தேடி வந்தனர். இந்நிலையில் மேலூர் அருகே உள்ள தனியாமங்கலத்தில் கால்வாயில் கணேஷின் சடலம் ஞாயிற்றுக்கிழமை மிதந்தது. இதுதொடர்பாக அப்பகுதியினர் அளித்த தகவலின்பேரில் கீழவளவு போலீஸார் சடலத்தை மீட்டனர்.
அதிகரிக்கும் உயிரிழப்பு: வைகை அணையில் இருந்து மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களின் குடிநீர்த் தேவைக்கும், பாசன வசதிக்கும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் வைகை ஆற்றில் இருகரைகளையும் தொட்டுக்கொண்டு தண்ணீர் செல்கிறது. இதனால் வைகை ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ இறங்க வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் எச்சரிக்கையை மீறி வைகை ஆற்றில் குளிக்கச் செல்வதாலும், ஆற்றில் விளையாடுவதாலும் பொதுமக்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பது அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் வைகை ஆற்றில் குளிக்கச் சென்ற 6 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை 10 பேர் பலி
மதுரை பகுதியிலிருந்து இருசக்கர வாகனங்களில் வருவோர் கள்ளந்திரி கால்வாயில் மதுபாட்டில்களை கொண்டு வந்து குளித்துக் கொண்டே குடிக்கின்றனர். கரையோரங்களில் உட்கார்ந்து உணவு சாப்பிடுகின்றனர். நகர்ப்புற மக்களில் பெரும்பாலானோர் நீச்சல் தெரியாத நிலையில், அதிக போதையில், நீரின் வேகத்தில் இழுத்துச் செல்லப்படுகின்றனர். சத்திரப்பட்டி முதல் கள்ளந்திரி வரை இந்நிகழ்வு அடிக்கடி நடைபெறுகிறது. கடந்த ஜூன் மாதம் விவசாயத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்ட பின்னர்,  இதுவரை 10-க்கும் மேற்பட்டோர் கள்ளந்திரி கால்வாய் நீரில் மூழ்கி இறந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com