கண்மாய்களில் தூர்வாரும் பணியில் விதிகள் மீறப்பட்டால் அனுமதி ரத்து: ஆட்சியர் எச்சரிக்கை

கண்மாய்களில் தூர்வாரும்போது அரசின் விதிமுறைகள் மீறப்பட்டால்,  அதற்கான அனுமதி ரத்து செய்யப்படும் என, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் எஸ். நடராஜன் எச்சரித்துள்ளார்.

கண்மாய்களில் தூர்வாரும்போது அரசின் விதிமுறைகள் மீறப்பட்டால்,  அதற்கான அனுமதி ரத்து செய்யப்படும் என, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் எஸ். நடராஜன் எச்சரித்துள்ளார்.
    இது தொடர்பாக அவர்  ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் வறட்சியான சூழ்நிலையை சமாளிக்கவும், நீர்நிலைகளை ஆழப்படுத்தி மழைக் காலத்தில் அதிக அளவில் நீரை சேமிக்கவும், நீர்நிலைகளில் படிமம் மற்றும் மணல் ஆகியவற்றை இலவசமாக எடுத்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, ராமநாதபுரம் மாவட்டத்தில் நீர்நிலைகளில் உள்ள கனிமங்களை தேவைப்படும் விவசாயிகள், மண்பாண்டம் செய்யும் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
    இச்சிறப்புத் திட்டத்தின் கீழ் 9,600 விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அதில் தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டன. இறுதியாக, மாவட்டத்தில் 8,512 விவசாயிகளுக்கு இலவசமாக மண் எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
   இந்த அனுமதியின் கீழ், மாவட்டத்தில் 54 கண்மாய்களும், 762 ஊருணிகளும் மக்கள் பயனடையும் வகையில் மண் எடுத்துக் கொள்வதால், நீர்நிலைகளும் தூர்வாரப்படும். இத்திட்டத்தின் கீழ், ராமநாதபுரம் மாவட்டத்தில் 816 நீர்நிலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு, சிறப்பான முறையில் தூர்வாரப்பட்டுள்ளது.
   இதில், விதிமுறைகளை மீறி ஒரு சில இடங்களில் மணல் அள்ளப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது. அவ்வாறு விதிமுறைகளை மீறி மணல் அள்ளப்பட்ட இடங்களை உடனடியாக மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
   தூர்வாரும் பணியில் அரசின் விதிமுறைகளை மீறி அளவுக்கு அதிகமாகவோ அல்லது வணிக நோக்குடனோ மணல் அள்ளுவது தெரியவந்தால், அவர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதியும் உடனடியாக ரத்து செய்யப்படும். இதற்காக, வேளாண்மை அதிகாரிகளைக் கொண்ட ஒரு குழுவும் அமைக்கப்பட்டு, ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறும் உத்தரவிடப்பட்டிருப்பதாகவும் அதில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com