கமுதி ஒன்றியக் கிராமங்களில் 12-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள் மூடல்

கமுதி பகுதியிலுள்ள கிராமங்களில் கடந்த 10 ஆண்டுகளில் 12-க்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

கமுதி பகுதியிலுள்ள கிராமங்களில் கடந்த 10 ஆண்டுகளில் 12-க்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
   ராமநாதபுரம் மாவட்டம், கமுதி ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில் மட்டும் 15 ஆண்டுகளுக்கு முன் 200-க்கும் மேற்பட்ட தொடக்கப் பள்ளிகள் இயங்கி வந்தன. ஆனால், தற்போது 97 பள்ளிகள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன. இதனால், கிராமங்களில் உள்ள மாணவ, மாணவியரின் கல்வி கேள்விக்குறியாகி உள்ளது.
   கமுதி ஒன்றியத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இடிவிலகி ஊராட்சிக்கு உள்பட்ட இடிவிலகி, பூலாப்பத்தி, கருத்தறிவான் ஆகிய கிராமங்களில் உள்ள 3 பள்ளிகளும், அரியமங்கலம் ஊராட்சியில் 40 ஆண்டுகளாக அரியமங்கலம் பள்ளியும், எருமைகுளம் ஊராட்சியில் உள்ள கரிசல்புளி பள்ளியும், காத்தனேந்தல் ஊராட்சியில் உள்ள குமிலாங்குளம் பள்ளியும், எம்.புதுக்குளம் ஊராட்சியில் உள்ள திருவரை பள்ளியும்,  கோவிலாங்குளம் ஊராட்சியில் உள்ள வேலாங்குளம் பள்ளியும், கே.நெடுங்குளம் ஊராட்சியில் உள்ள கலைக்குளம் பள்ளியும், பேரையூர் ஊராட்சியில் பேரையூர் பள்ளியும், சடையனேந்தல் ஊராட்சியில் உள்ள ஏ.பாப்பாங்குளம் பள்ளியும், ஒ.கரிசல்குளம் ஊராட்சியில் உள்ள ஒழுகுபுளி பள்ளியும் என இதுவரை 12-க்கும் மேற்பட்ட பள்ளிகள் கிராமப்புறங்களில் நிரந்தரமாகவும், தாற்காலிகமாகவும் பள்ளி கல்வித் துறை அதிகாரிகளால் பூட்டி வைக்கப்பட்டுள்ளன.
இது குறித்து அரியமங்கலம் பகுதியில் உள்ள மாணவர்களின் பெற்றோர்கள் கூறியதாவது: தங்கள் ஊரில் செயல்பட்டுவந்த பள்ளி 40 ஆண்டுகளுக்கு முன் நிரந்தரமாக மூடப்பட்டுள்ளதால், ஆரம்ப படிப்பு பயில்வதற்கு கூட 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பெருநாழிக்கு தினமும் 3 கிலோ மீட்டர் நடந்து சென்று வரவேண்யிருக்கிறது. இதனால், பெரும்பாலான பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் உள்ளனர் என்றனர்.
 மேலும், கிராமப் பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் சரியாக வராததால், மாணவர்களின் கல்வித் திறன் குறைந்து, மாணவர்களின் எண்ணிக்கையும் குறைந்தது. கல்வித் துறை அதிகாரிகள் கிராமப் பள்ளிகள் முறையாகச் செயல்படுகின்றனவா என எந்தவித ஆய்வும் மேற்கொள்ளாததால், அப்பள்ளிகளை மூடும் நிலை ஏற்பட்டதாக, பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே, கிராமங்களில் போதிய அளவு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி, மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
   இது குறித்து கமுதி தொடக்கக் கல்வி அலுவலர் ஆரோக்கியதாஸ் கூறுகையில், அரசு சார்பில் ஏழை மாணவர்களுக்கு பல்வேறு சலுகைகள் இலவசமாக வழங்கினாலும், கிராமப்புறங்களில் உள்ள பொதுமக்களின் எண்ணிக்கை குறைவதால், பள்ளிகளில் தற்போது மாணவர்களின் எண்ணிக்கையும் ஒவ்வொரு ஆண்டும் வெகுவாக குறைந்து கொண்டே வருகிறது.
மேலும், ஆசிரியர்கள் வருகை உள்ளிட்டவை குறித்து முறையாக ஆய்வு செய்து, ஆசிரியர்கள் மீதும் பல்வேறு நடவடிக்கைகளும் எடுத்து வருகிறோம். 5 ஆண்டுகளுக்குள் அல்லது பள்ளியே இல்லாத கிராமங்களில் போதிய அளவு மாணவர்களின் எண்ணிக்கை இருக்குமானால், அந்தப் பள்ளியை மீண்டும் துவங்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com