கொலை வழக்கில் விவசாயிக்கு ஆயுள் தண்டனை

கடலாடியில் கடந்த 2010 ஆம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து பரமக்குடி கூடுதல் மாவட்ட நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.

கடலாடியில் கடந்த 2010 ஆம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து பரமக்குடி கூடுதல் மாவட்ட நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.
 முதுகுளத்தூர் அருகே உள்ள ஆப்பனூர் அருணகிரிகொட்டகை கிராமத்தைச் சேர்ந்த கந்தத்தேவர் மகன் முத்துவேல் என்ற உடையார்(49). விவசாயி. திருச்சியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவருக்கும் அருணகிரிகொட்டகையைச் சேர்ந்த அருணாசலம் குடும்பத்துக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
துக்க நிகழ்ச்சிக்காக சொந்த ஊருக்கு வந்த உடையார், 23.9.2010-அன்று கடலாடியில் உள்ள டீக்கடையில் வைத்து அருணாசலத்தின் மகன்கள் தர்மலிங்கம், திருஞானம் ஆகிய இருவரையும் அரிவாள், கம்பால் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த இருவரும் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி தர்மலிங்கம் 27.9.2010-இல் உயிரிழந்தார்.
இது தொடர்பாக முத்துவேல், அதே ஊரைச் சேர்ந்த அவரது உறவினர்கள் சண்முகவேல் தேவர் மகன் சுப்பிரமணி(72), அவரது மனைவி கெங்காயி(66), மகன் நாகநாதன்(35) ஆகிய 4 பேர் மீது கடலாடி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
 இந்த வழக்கு விசாரணை பரமக்குடி கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இவ்வழக்கில் மாவட்ட நீதிபதி கே.குருவையா திங்கள்கிழமை தீர்ப்பளித்தார்.
தீர்ப்பு விவரம்: தர்மலிங்கத்தை கொலை செய்த குற்றத்திற்காக முத்துவேல் என்ற உடையாருக்கு ஆயுள் தண்டனையும், 5 ஆயிரம் அபராதமும், கட்டத்தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனையும், கொடுங்காயம் ஏற்படுத்திய குற்றத்திற்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ 2,500 அபராதம், கட்டத்தவறினால் 6 மாதம் சிறை தண்டனையும், கொலை மிரட்டல் விடுத்ததற்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.500 அபராதமும், கட்டத்தவறினால் ஒரு மாதம் சிறை தண்டனையும் தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் சுப்பிரமணி, கெங்காயி, நாகநாதன் ஆகியோரை விடுதலை செய்தும் நீதிபதி தீர்ப்பளித்தார்.
அரசு தரப்பு வழக்குரைஞராக சி.கே.வெங்கடேசன் ஆஜரானார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com