தொண்டி அருகே பாண்டியர் கால கல்வெட்டுகள் கண்டெடுப்பு

 ராமாநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே புல்லுகுடி கிராமத்தில் கி.பி.  1201ஆம்  ஆண்டைச்  சேர்ந்த பாண்டியர் கால கல்வெட்டுகள் கண்டெக்கப்பட்டுள்ளன.

 ராமாநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே புல்லுகுடி கிராமத்தில் கி.பி.  1201ஆம்  ஆண்டைச்  சேர்ந்த பாண்டியர் கால கல்வெட்டுகள் கண்டெக்கப்பட்டுள்ளன.
      ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே புல்லுகுடி சிவன்கோயிலில் ராமநாதபுரம் தொல்லியல் மற்றும் வரலாற்று பாதுகாப்பு மைய தலைவர் வே.இராஜகுரு,  செயலாளர் காளிமுத்து, வரலாற்று  ஆர்வலர் விமல்ராஜ், திருப்புல்லாணி அரசு மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு மாணவிகள் அபிநயா,  விசாலி,  அபர்ணா,  சினேகா ஆகியோர் களஆய்வு செய்தனர்.  அப்போது கோயிலில் பாண்டியர் காலக் கல்வெட்டுகள் இருப்பதைக்  கண்டறிந்தனர்.
     இதுபற்றி தொல்லியல் ஆய்வாளர் வே.இராஜகுரு செய்தியாளர்களிடம் கூறியதாவது: இக்கோயில் விமானத்தின் கீழ்பகுதியில் 105 வரிகள் கொண்ட கல்வெட்டு உள்ளது. இவை  கி.பி.1201  ஆம் ஆண்டைச் சேர்ந்த முதலாம் சடையவர்மன் குலசேகரபாண்டியன் காலத்தைச் சேர்ந்தவை ஆகும்.     கல்வெட்டுகளில் இவ்வூர் புலிகுடி எனவும்,  இக்கோயில் இறைவன் பெயர் ஸ்ரீகயிலாயமுடையார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 சிவன்கோயிலுக்கு தானமாக நிலம் வழங்குவதை தேவதான இறையிலி என்பர்.  இக்கோயிலுக்கு வாகைக்குடி, சாத்தி ஏரி ஆகிய இரு ஊர்களை தானமாக வழங்கிய செய்தியை கல்வெட்டு தெரிவிக்கிறது.     
  ஆர்.எஸ்.மங்கலம் செல்லும் வழியில் 2 கி.மீ.  தொலைவில் வாகைக்குடி  உள்ளது. சாத்தி ஏரி எனும் பெயரில் இப்பகுதியில் ஊர் எதுவும் இல்லை. அது அழிந்துபோயிருக்கலாம்.   கல்வெட்டின் முதல்பகுதி அழிந்துள்ளது.  மன்னரின் பெயர் வரும் இடங்கள் சேதமடைந்துள்ளன. இக்கோயில் நிர்வாகியான தேவகன்மியிடமும்,  கோயில் குருக்களான  சிவப்பிராமணருக்கும்  கொடுத்த வாக்குப் படி,   தேவதானம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலங்களுக்கு அந்தராயம்  எனும் உள்வரியும் நீக்கப்பட்டுள்ளதாக கல்வெட்டு தெரிவிக்கிறது. தேவதானமாக இரு ஊர்கள் வழங்கப்பட்டிருந்தாலும்,  நிலத்தின்  எல்லைகள் கல்வெட்டில் சொல்லப்படவில்லை.  எனவே அந்த ஊர்களின் முழுபகுதிகளையும் கோயிலுக்கு  தானமாக வழங்கி இருக்கலாம்.  அண்டநாட்டு பெருமணலூர் (கீழடி அருகில் உள்ளது), வடதலைச் செம்பில் நாட்டு ஆயக்குடியான அழகியபாண்டியநல்லூர் (பரமக்குடி அருகில் உள்ள ஆய்குடி) போன்ற பல ஊர்களைச் சேர்ந்த  அரசு அதிகாரிகளின் பெயர்கள் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளன.  சோழர்களின் ஆதிக்கத்தில் நூறு ஆண்டுகளுக்கும் மேல் பாண்டியநாடு இருந்தபோது புல்லுகுடி எனும் இவ்வூர் புலிகுடியாக மாற்றப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.   இக்கல்வெட்டில் செம்பியர் எனும் சோழர்களும் திறையுடன் வந்து தன்னைப் பணிந்தார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com