சத்துணவு ஊழியர்கள் 2 ஆவது நாளாக சாலை மறியல்: ராமநாதபுரம், சிவகங்கையில் 425 பேர் கைது

காலமுறை ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரம், சிவகங்கையில் புதன்கிழமை 2 ஆவது நாளாக சாலை மறியலில் ஈடுபட்ட 327 பெண்கள் உள்பட 425 பேர் கைது செய்யப்பட்டனர்.

காலமுறை ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரம், சிவகங்கையில் புதன்கிழமை 2 ஆவது நாளாக சாலை மறியலில் ஈடுபட்ட 327 பெண்கள் உள்பட 425 பேர் கைது செய்யப்பட்டனர்.
   சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்பட வேண்டும், ஓய்வு பெறும் போது வழங்கப்படும் பணிக்கொடையை ரூ.5 லட்சமாக உயர்த்தித் தர வேண்டும், ஒரு மாணவருக்கான உணவு மானியத்தை ரூ.3 ஆக உயர்த்தித் தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை முதல் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 ராமநாதபுரத்தில் ஒன்றிய அலுவலகம் எதிரே மதுரை-மண்டபம் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் கே.மணிமொழி தலைமை வகித்தார். போராட்டத்தை அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பெ.சேகர் தொடக்கி வைத்துப் பேசினார். முன்னாள் மாவட்ட செயலாளர் ஜி.கணேசமூர்த்தி, முன்னாள் மாவட்ட தலைவர் கே.முருகேசன், சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ஏ.முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சாலை மறியலில் ஈடுபட்ட 167 பெண்கள் உள்பட 232 பேரை போலீஸார் கைது செய்தனர். கைதான அனைவரும் தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு காவல்துறை சார்பில் மாலை 3.30 மணி வரை உணவு வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
பெண் மயக்கம்: இந்நிலையில், கடலாடி அருகே மாரந்தை கிராமத்தைச் சேர்ந்த சத்துணவு ஊழியர் லெட்சுமி திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர் ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
சிவகங்கை: மாவட்ட சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் சிவங்கை அரண்மனை வாசல் முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சாலை மறியலுக்கு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கண்ணுச்சாமி தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் சீமைச்சாமி, மாநிலத் துணைத் தலைவர் பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மறியலில் ஈடுபட்ட 160 பெண்கள் உள்பட 193 பேரை போலீஸார் கைது செய்தனர். பின்னர் மாலையில் அனைவரையும் விடுவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com