பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு ரூ.3.75 கோடி விரைவில் இழப்பீடு: ஆட்சியர்

கடந்த 2015-2016 ஆம் ஆண்டில் நெற்பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க, ராமநாதபுரம் மாவட்டத்துக்கு ரூ.3.75 கோடி நிதி

கடந்த 2015-2016 ஆம் ஆண்டில் நெற்பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க, ராமநாதபுரம் மாவட்டத்துக்கு ரூ.3.75 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் எஸ். நடராஜன் தெரிவித்தார்.
   ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற  விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியர் மேலும் பேசியதாவது:   ராமநாதபுரம் மாவட்டத்தில் 2016-2017 ஆம் ஆண்டில் வறட்சியால் பாதிக்கப்பட்ட 1,38,900 விவசாயிகளுக்கு நிவாரணத் தொகையாக ரூ. 146.22 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, அவரவர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நெற்பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு கடந்த 2015-2016 ஆம் ஆண்டுக்கான நிவாரணத் தொகையாக ரூ. 3.75 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான விவசாயிகளின் பட்டியல் வந்தவுடன், பயிர்க் காப்பீட்டுத் தொகை அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.    அனைத்து விவசாயிகளுக்கும் பயிர்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகை விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.   ராமநாதபுரம் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறையை போக்கிட ரூ.17.67 கோடி மதிப்பில் உறை கிணறுகள், கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கும் பணிகள் என மொத்தம் 1,192 பணிகள் ஊரக வளர்ச்சித் துறை மூலம் நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் 40 கண்மாய்கள், 38 ஊருணிகள், 5 கிராம ஊருணிகளையும் சீரமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளன. மேலும், வரத்துக் கால்வாய் பணிகள் 147 இடங்களிலும், கிணறுகள் தூர்வாரும் பணி 11 இடங்களிலும் என மொத்தம் 249 பணிகளும் முடிக்கப்பட்டுள்ளன.   வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் குடிநீர் பயன்பாட்டுக்காக சிறு ஊருணிகள் அமைக்கப்பட்டுள்ளன. ராமநாதபுரம் மாவட்டத்தில் 2017-2018 ஆம் ஆண்டில் இதுவரை 177 புதிய பண்ணைக் குட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன. குண்டாறு வடிநிலக் கோட்டத்தில் 14 கண்மாய்கள் தேர்வு செய்யப்பட்டு, ரூ.100.60 லட்சம் மதிப்பில் குடிமராமத்துப் பணிகள் தொடங்கப்பட்டு, 5 கண்மாய்களிலும் பணிகள் நிறைவடைந்துள்ளன எனவும் ஆட்சியர் தெரிவித்தார்.   கூட்டத்தில், மாவட்ட வருவாய் அதிகாரி சி. முத்துமாரி, வேளாண்மை இணை இயக்குநர் எஸ். அரிவாசன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) எஸ். வெள்ளைச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், விவசாயிகளும், விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com