ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆண்டுக்கு 94,952.89 டன் மீன்கள் பிடிப்பு: அமைச்சர் மு.மணிகண்டன் தகவல்

ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் ஓராண்டுக்கு 94,952.89 டன் மீன்கள் பிடிக்கப்படுவதாக, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் டாக்டர் மு. மணிகண்டன் சனிக்கிழமை தெரிவித்தார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் ஓராண்டுக்கு 94,952.89 டன் மீன்கள் பிடிக்கப்படுவதாக, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் டாக்டர் மு. மணிகண்டன் சனிக்கிழமை தெரிவித்தார்.
ராமநாதபுரம் அம்மா பூங்கா அருகில், தேசிய மீன்வள அபிவிருத்திக் கழகத்தின் நிதியுதவியுடன், தமிழ்நாடு மாநில மீன்வள கூட்டுறவு இணையம் மூலம் புதிதாக நவீன மீன் விற்பனை நிலையம் கட்டப்பட்டுள்ளது. இந்த நிலையத்தை, அமைச்சர் டாக்டர் மு. மணிகண்டன் சனிக்கிழமை திறந்துவைத்து பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியது:
ராமநாதபுரம் 237 கி.மீ. தொலைவுக்கு நீண்ட கடற்கரையோர மாவட்டம். இங்குள்ள மீனவர் நலனுக்காக, 234 மீனவர் கூட்டுறவுச் சங்கங்கள் உள்ளன. 6 மீன்பிடித் துறைமுகங்களும், 8 மீன் இறக்கு தளங்களும் உள்ளன.
மாவட்டத்தில் ஆண்டு ஒன்றுக்கு 94,952.89 டன் மீன்கள் பிடிக்கப்படுகின்றன. மீன்பிடித் தடைக் காலத்தின்போது, மீனவர்களுக்கு சிறப்பு உதவித் தொகையாக ஒரு குடும்பத்துக்கு ரூ.5 ஆயிரம் வீதம் 32,174 குடும்பங்களுக்கு மொத்தம் ரூ.16.08 கோடி வழங்கப்படுகிறது. சென்னையில் உள்ள தமிழ்நாடு மாநிலத் தலைமை மீன்வள கூட்டுறவு இணையம் வாயிலாக 477 மீனவ கூட்டுறவுச் சங்கங்கள், 1,431 உள்நாட்டு மீனவக் கூட்டுறவுச் சங்கங்கள், 158 மகளிர் மீனவக் கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் 9 மாவட்ட மீனவக் கூட்டுறவு இணையங்கள் உறுப்பினர்களாக உள்ளன.
தற்போது, தமிழ்நாடு மாநில மீன்வளத் தலைமை கூட்டுறவு இணையம் மற்றும் உறுப்பினர் சங்கங்களால் மீன் விற்பனையை மேம்படுத்திடவும், பொதுமக்கள் நியாயமான விலையில் தரமான மீன்களைப் பெற்று பயன்பெறவும், மீன் விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, ராமநாதபுரம் அம்மா பூங்கா அருகே புதிதாக நவீன மீன் விற்பனை நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். திறப்பு விழாவுக்கு, ராமநாதபுரம் ஆட்சியர் எஸ். நடராஜன் தலைமை வகித்தார். தமிழ்நாடு மாநில மீன்வளத் தலைமை கூட்டுறவு இணையத்தின் தலைவர் எம். சேவியர் மனோகரன், ராம்கோ தலைவர் செ. முருகேசன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர் ஜெகஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், அரசு துறை அலுவலர்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com