இலங்கைக்கு கடத்தவிருந்த 300  கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்

மண்டபத்திலிருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ. 5 லட்சம் மதிப்பிலான 300 கிலோ கடல் அட்டைகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மண்டபத்திலிருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ. 5 லட்சம் மதிப்பிலான 300 கிலோ கடல் அட்டைகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
       ராமநாதபுரம் மாவட்டம், மன்னார் வளைகுடா கடல் பகுதியில் உள்ள கடல் அட்டை, கடல் குதிரை, கடல் பல்லி உள்ளிட்ட அரிய வகை கடல்வாழ் உயிரினங்களை பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.      இந்தத் தடையை மீறுபவர்களுக்கு 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்கும் வகையில், கடல்வாழ் உயிரினப் பாதுகாப்புச் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
      இருப்பினும், ராமேசுவரம், பாம்பன், மண்டபம், வேதாளை உள்ளிட்ட பகுதிகளில் கடல் அட்டை கடத்தல் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இதனைத் தடுக்க, வனத் துறை மற்றும் கடலோரப் பாதுகாப்பு குழும காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
     இந்நிலையில், மண்டபம் மேற்குவாடி கடல் பகுதியில் கடலோரப் பாதுகாப்பு குழும காவல்துறை உதவி ஆய்வாளர் ராஜ்குமார் தலைமையில், போலீஸார் கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கடற்கரை ஒட்டியுள்ள தோப்புப் பகுதியில் சந்தேகத்துக்கு  இடமளிக்கும் வகையில் ஆள்கள் நடமாடுவதை காவல் துறையினர் கண்டனர். உடனே, போலீஸார் அங்கு சென்றபோது, அங்கிருந்து மர்ம நபர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
      தோப்புக்குள் சென்ற காவல் துறையினர், இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 300 கிலோ எடையுள்ள பச்சை அட்டையை பறிமுதல் செய்தனர். மேலும், கடல் அட்டையை பதப்படுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த பொருள்களையும் பறிமுதல் செய்தனர்.      தொடர்ந்து, கடல் அட்டை மற்றும் பொருள்களை வனத் துறையினரிடம் ஒப்படைத்தனர். கடல் அட்டையை பதப்படுத்தி, இலங்கை வழியாக சீனா, ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளுக்கு கொண்டு செல்லவிருந்தது தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டையின் மதிப்பு சுமார் ரூ. 5 லட்சம்  என, காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com