ராமேசுவரம் ரயில் நிலையத்தில் ஓய்வறை இன்றி ரயில்வே காவலர்கள் தவிப்பு

ராமேசுவரம் ரயில் நிலையத்தில் ரயில்வே காவல் துறைக்கு வழங்கப்பட்ட ஓய்வு அறை காலி செய்யப்பட்டதால், காவலர்கள் ஓய்வெடுக்க இடமின்றி தவித்து வருகின்றனர்.

ராமேசுவரம் ரயில் நிலையத்தில் ரயில்வே காவல் துறைக்கு வழங்கப்பட்ட ஓய்வு அறை காலி செய்யப்பட்டதால், காவலர்கள் ஓய்வெடுக்க இடமின்றி தவித்து வருகின்றனர்.
ராமேசுவரம் ரயில் நிலையத்தில் இருப்புப் பாதை காவல்துறை சேதமடைந்த கட்டடத்தில் இயங்கி வந்தது. எனவே, புதிய காவல் நிலைய கட்டுமானப் பணிகள் 8 ஆண்டுகளுக்கு முன் தொடங்கியது. ஆனால், இன்று வரை கட்டுமானப் பணிகள் முடிவடையவில்லை.
இதனால், பயணிகள் பயன்படுத்தி வந்த ஓய்வு  அறையில் தாற்காலிகமாக காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, 3 பெண்கள் காவலர்கள் உள்பட மொத்தம் 36 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், திடீரென ரயில்வே நிர்வாகம் வி.ஐ.பி. பயணிகளுக்கு குளிர் சாதன வசதிகளுடன் கூடிய அறை அமைப்பதற்காக, காவல் துறையினர் பயன்படுத்தி வந்த பயணிகள் அறையை காலி செய்ய உத்தரவிட்டது. அதையடுத்து, அந்த இடம் காலி செய்யப்பட்டது. ஆனால், மாற்று இடம் ஒதுக்கீடு செய்யப்படாததால்,  பெண் காவலர்கள் உள்பட அனைவரும் சிரமப்பட்டு வருகின்றனர்.
 ஓய்வு அறை இல்லாததால் காவல்துறையினர் உரிய நேரத்தில் பாதுகாப்பு பணி மேற்கொள்வதில் சிக்கல் ஏற்படும். இதனால், ரயில் பயணிகள் பாதிக்கப்படுவர் என, சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
எனவே, புதிய காவல் நிலைய கட்டுமானப் பணிகளை விரைந்து முடித்து காவலர்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com