வாழத் தகுதியான இடமா தனுஷ்கோடி? உயர்நீதிமன்ற நீதிபதிகள் குழு ஆய்வு

பொதுமக்கள் வாழ தகுதியான இடமா என தனுஷ்கோடியில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தனர்.

பொதுமக்கள் வாழ தகுதியான இடமா என தனுஷ்கோடியில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை துறைமுக நகரமாக விளங்கியது. தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னாருக்கு வாரத்திற்கு மூன்று பயணிகள் கப்பல் இயக்கப்பட்டு வந்தன. 1964-ஆம் ஆண்டு புயலில் தனுஷ்கோடி அழிந்தது. இதையடுத்து  தனுஷ்கோடி வாழ ஏற்ற இடம் கிடையாது என தமிழக அரசு அறிவித்தது.
இருப்பினும் அப்பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில் தனுஷ்கோடி பகுதியில் உள்ள மீனவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்துகொண்டுக்க வேண்டும் என ராமநாதபுரத்தை சேர்ந்த வழக்குரைஞர் திருமுருகன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்தார். ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் மற்றும் தீர்த்தம் நீராடுவதற்கு அதிக பணம் கேட்பது, அக்னி தீர்த்தக் கடலில் கழிவு நீர் கலப்பது உள்ளிட்டவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவையைச் சேர்ந்த வழக்குரைஞர் வெண்ணிலா வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த இரண்டு வழக்குகளிலும்,  ராமேசுவரம் மற்றும் தனுஷ்கோடியில் நீதிபதிகள் நேரில் சென்று ஆய்வு செய்த பின் அதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என நீதிபதிகள் அறிவித்திருந்தனர். அதன்படி உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன், ஜெ.நிஷாபானு ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை ராமேசுவரம் வந்தனர்.  பாம்பன் சாலைப் பாலத்தை காலையில் ஆய்வு செய்தனர். பின்னர்,  ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் 22 தீர்த்தக் கிணறுகளில் புனித நீராடி பக்தர்களுக்கான வசதிகள் குறித்துஆய்வு செய்தனர். பின்னர் அக்னி தீர்த்தக் கடலில் கழிவுநீர் கலப்பது உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்தனர்.
மாலையில் தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்து அங்குள்ள மீனவர்களிடம் பிரச்னைகளைக் கேட்டறிந்தனர்.
பின்னர் பேக்கரும்பில் உள்ள ஏ.பி.ஜே.அப்துல்கலாம் தேசிய நினைவிடத்தை பார்வையிட்டனர். ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் ச.நடராஜன்,  காவல்துறை கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ்மீனா,  நீதித்துறை நடுவர்கள் குருவையா(பரமக்குடி),  லிங்கேஸ்வரன்(ராமநாதபுரம்), பிரபாகரன்(ராமேசுவரம்), ராமேசுவரம் கோயில் உதவி ஆணையர் ஏ.பாலசுப்பிரமணயன், கோட்டப் பொறியாளர் மயில்வாகனன் உள்ளிட்டோர்  உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com