நாட்டுப்படகு மீனவர்கள் "பைபர்' படகுகள் வாங்க மானியம்: அரசுக்கு மீனவர் சங்கம் வலியுறுத்தல்

தமிழகத்தில் விசைப்படகுகள் வாங்க மானியம் அளிப்பது போல நாட்டுப்படகு மீனவர்களுக்கு பைபர் படகுகள் வாங்க தமிழக அரசு மானியம் வழங்க வேண்டும்

தமிழகத்தில் விசைப்படகுகள் வாங்க மானியம் அளிப்பது போல நாட்டுப்படகு மீனவர்களுக்கு பைபர் படகுகள் வாங்க தமிழக அரசு மானியம் வழங்க வேண்டும் என  நாட்டுப்படகு மீனவ சங்கத்தினர் தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்.
    தமிழகத்தில் இருந்து மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்துவது, படகுகளுடன் மீனவர்களை சிறைபிடித்து செல்வது என தொடர்ந்து இலங்கை கடற்படையினர் அச்சுறுத்தி வருகின்றனர். மேலும் மீனவர்கள் விடுவிக்கப்பட்டாலும் படகுகளை விடுவிப்பதில் சிக்கல் இருந்து வருகின்றது. இந்நிலையில் பாக்நீரணைப் பகுதியில் இந்திய கடல் எல்லை மிகவும் குறைவாக உள்ளதால் இலங்கை கடற்படையினர் தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் விசைப்படகு மீனவர்களின் பங்களிப்புடன் 80 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்கடல் மீன்பிடிப்பு படகுகள் வழக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், மாவட்ட நாட்டுப்படகு மீனவர் நல உரிமைச் சங்கம் சார்பில்அதன் தலைவர் எஸ்.பி.ராயப்பன் அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.  பாம்பன் பகுதிகளில் பலஆண்டுகாளக பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்கள் கச்சத்தீவு மற்றும் அதனை சுற்றி உள்ள கடற்பகுதியில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ளனர். மத்திய, மாநில அரசுகள் விசைப்படகு மீனவர்களுக்கு மானியத்துடன் படகுகள் வழங்குவது போல நாட்டுப்படகு மீனவர்களுக்கும் ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு ஏற்றவாறு உள்ள பைபர் படகுகள் , இயந்திரம், வலைகள் மற்றும் தூண்டில் போன்ற மீன்பிடி உபகரணங்களை மானிய விலையில் வழங்கிடக்கோரி தமிழக முதல்வர், மீன்வளத்துறை அமைச்சர்,மீன்வளத்துறை செயலர், மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு மனு அனுப்பி வைக்கப்பட்டள்ளதாக ராயப்பன் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com