ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மூதாட்டி தீக்குளிக்க முயற்சி
By DIN | Published on : 17th April 2018 07:00 AM | அ+அ அ- |
வாடகைக்கு குடியிருப்பவர் தனது வீட்டை அபகரிக்க முடிவு செய்திருப்பதாகக் கூறி, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்ய முயன்றார்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகேயுள்ள பெருமாள் கோயில் கிராமத்தைச் சேர்ந்த முத்துச்சாமியின் மனைவி பாண்டியம்மாள் (70). இவரது 5 மகள்களும் திருமணம் செய்து கொடுத்து, வெளியூரில் வசித்து வருகின்றனராம்.
இந்த நிலையில், இவரது வீட்டில் 3 ஆண்டுகளுக்கு முன்பு வாடகைக்கு குடிவந்த காளைச்சாமி, இவரது மனைவி இந்திராணி மற்றும் உறவினர்கள் வேணி, ராஜேஸ்வரி ஆகியோர் ஒன்றுசேர்ந்து, பாண்டியம்மாள் வீட்டை அபகரிக்கும் நோக்கில்
அவரை வீட்டைக் காலி செய்துவிட்டுச் செல்லுமாறு கொலை மிரட்டல் விடுக்கின்றனராம்.
மேலும், அடிக்கடி அரிவாளை தூக்கி வந்து வெட்டிக் கொலை செய்து விடுவேன் எனக் கூறியதால், பரமக்குடி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளாராம். இருப்பினும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.
இந்நிலையில், வீடு வாடகைக்கு குடி வந்தவர்கள் தனது சொத்தை அபகரிக்க முயல்வதால் மனம் வெறுத்த மூதாட்டி பாண்டியம்மாள், திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்துக்கு மனு அளிக்க வந்தார். அப்போது, திடீரென மூதாட்டி தான் வைத்திருந்த மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
ஆனால், அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரர் பாண்டியராஜ், தண்ணீரை ஊற்றி மூதாட்டியைக் காப்பாற்றினார். அதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் மூதாட்டியை கேணிக்கரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.