300 ஆண்டுகள் பழமைவாய்ந்த கமுதி கோட்டையில் மரபுநடை நிகழ்ச்சி

முன்னூறு ஆண்டுகள் பழமைவாய்ந்த கமுதி கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை மரபுநடை நிகழ்ச்சி நடைபெற்றது.

முன்னூறு ஆண்டுகள் பழமைவாய்ந்த கமுதி கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை மரபுநடை நிகழ்ச்சி நடைபெற்றது.
 ராமநாதபுரம் மாவட்ட தொல்லியல் ஆய்வு நிறுவனம் சார்பில் மாவட்டத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களை தேர்வுசெய்து மாணவர்கள், பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் ஒவ்வொரு மாதமும் 3-ஆவது ஞாயிற்றுக்கிழமைகளில் மரபுநடை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
  இந்த மாதம் கமுதி கோட்டையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு தலைமை வகித்தார். பின்னர் அவர் கூறியதாவது:
 வணிகம், சமணம், கோட்டை, கழுமரங்கள், மலைக்கோயில்கள், பாரம்பரிய தாவரங்கள் என பல்வேறு பழைமை தடயங்களை கொண்ட வரலாற்றுச் சுரங்கமாக கமுதி விளங்குகிறது. கி.பி. 1713 முதல் கி.பி. 1725 வரை சேது நாட்டை ஆண்ட முத்து விஜயரகுநாத சேதுபதி, பிரான்ஸ் நாட்டு பொறியியல் வல்லுநர்களின் உதவியுடன் கமுதி, பாம்பன், செங்கமடை ஆகிய இடங்களில் 3 புதிய கோட்டைகளை கட்டினார். 
 இதில் கமுதி கோட்டை குண்டாற்றின் கரையில் பாறைகள் நிறைந்த மேடான அடர்ந்த காட்டுப் பகுதியில் கட்டப்பட்டுள்ளது. இதன் மேற்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் உள்ள பாறைகள் உடைக்கப்பட்டு கோட்டையை கட்ட பயன்படுத்தப்பட்டுள்ளது. வெட்டி எடுக்கப்பட்ட பெரிய அளவிலான பாறைகள் தற்போதும் இப்பகுதியில் கிடப்பதை இது உறுதிப்படுத்துகிறது. வீரர்கள் நின்று கண்காணிக்கும் வகையில் 7 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்கோட்டை செங்கல் கற்களால் கட்டப்பட்டு, அதன் உள் மற்றும் வெளிப்புறங்களில் பலவிதமான பாறை கற்களை கொண்டு ஒட்டியுள்ளனர். இதனால் இக்கோட்டை வெளியில் இருந்து பார்பதற்கு கற்கோட்டை போன்று காட்சியளிக்கிறது என்றார்.
 இந்நிகழ்சியில் ராமநாதபுரம், கமுதி உள்ளிட்ட பகுதியில் இருந்து 200-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள், சமூக நல ஆர்வலர்கள், கலந்து கொண்டு கோட்டையை ஆர்வமுடன் பார்வையிட்டனர். 
 முன்னதாக ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவன செயலர் சோ.ஞானகாளிமுத்து வரவேற்றார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் கமுதி வெள்ளைப்பாண்டியன், பேரையூர் முனியசாமி, நிவாஸ்சங்கர் ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com