சிறுமிக்கு பாலியல் தொல்லை: 75 நாள்களுக்குப் பிறகு தனிப்பிரிவு காவலர் கைது

ராமேசுவரத்தில் சக காவலரின் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனிப்பிரிவு தலைமைக் காவலர் 75 நாள்களுக்குப் பிறகு வியாழக்கிழமை தனிப்படையினரால் கைது செய்யப்பட்டார்.

ராமேசுவரத்தில் சக காவலரின் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனிப்பிரிவு தலைமைக் காவலர் 75 நாள்களுக்குப் பிறகு வியாழக்கிழமை தனிப்படையினரால் கைது செய்யப்பட்டார்.
      ராமேசுவரம் காவலர் குடியிருப்பில் 100-க்கும் மேற்பட்ட காவலர்கள் வசித்து வருகின்றனர். இவர்களில், சிலை தடுப்புப் பிரிவு காவலரின் 11 வயது மகள் கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, அதே குடியிருப்பில் உள்ள தனிப்பிரிவு காவலர் சரவணன்,  அச்சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். சிறுமி சத்தமிட்டதால்,  அவரது தாயார் ஓடிவந்துள்ளார். ஆனால், அங்கிருந்து சரவணன் தப்பிச் சென்றுவிட்டார். 
     இது குறித்து மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், காவலர் குடியிருப்பிலிருந்து சரவணன் குடும்பத்தினர் வெளியேற மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா உத்தரவிட்டார். மேலும், சரவணனை பணி நீக்கம் செய்ததுடன், வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.     இந்நிலையில், தலைமறைவாகிவிட்ட தலைமைக் காவலர் சரவணனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. சரவணனை பல்வேறு இடங்களில் தேடி வந்த தனிப்படையினருக்கு, அவர் உச்சிப்புளியில் பதுங்கி இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. உடனே அங்கு சென்ற தனிப்படையினர், 75 நாள்கள் தேடுதலுக்குப் பிறகு சரவணனை கைது செய்தனர்.
     பின்னர், ராமேசுவரம் குற்றவியல் உரிமையியல் நடுவர் பிரபாகரன் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். விசாரணைக்குப் பின், ஏப்ரல் 28 ஆம் தேதி வரை அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டதையடுத்து, ராமநாதபுரம் சிறையில் சரவணன் வியாழக்கிழமை அடைக்கப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com