"ராமநாதபுரத்தில் ஆண்டுதோறும் புத்தகத் திருவிழா நடத்தப்படும்'

ராமநாதபுரத்தில் ஆண்டுதோறும் புத்தகத் திருவிழா நடத்தப்படும் என மக்களவை உறுப்பினர் அ. அன்வர்ராஜா தெரிவித்தார்.

ராமநாதபுரத்தில் ஆண்டுதோறும் புத்தகத் திருவிழா நடத்தப்படும் என மக்களவை உறுப்பினர் அ. அன்வர்ராஜா தெரிவித்தார்.
ராமநாதபுரம் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் சங்க இலக்கிய விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு தலைமை வகித்த மக்களவை உறுப்பினர் அ.அன்வர்ராஜா, நூல் ஆசிரியர் சக்தி.ஜோதி எழுதிய சங்கப் பெண் கவிதைகள் என்ற நூலை வெளியிட்டுப் பேசியது:
புத்தகங்கள் மனித வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது. நாகரிகத்தைக் கற்றுத்தருகிறது. படிக்க, படிக்க இன்பத்தை தருபவை புத்தகங்கள். புத்தகத்தின் பக்கங்களை மேலிருந்து  கீழாகப் படிக்கும் போது அதைப் படிக்கும் நம்மை கீழிருந்து மேலாகவும், மேன்மையானவர்களாகவும் மாற்றுகிறது. எறும்புகளுக்கு கண் இல்லை என்பதை சுமார் 2700 ஆண்டுகளுக்கு முன்பே தொல்காப்பியம் என்ற நூல் சொல்லியிருக்கிறது. இதை எந்த விஞ்ஞானிகளும் சொல்லவில்லை. திருக்குறளும்,திருக்குரானும் எனது இரு கண்கள் என்று அடிக்கடி சொல்லி வந்தவர் குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாம்.
ராமநாதபுரத்தில் புத்தகத்திருவிழா சிறப்பாக நடத்தப்பட்டது. கடந்த ஒரு சில ஆண்டுகளாக நடத்தப்படவில்லை. இந்த ஆண்டு முதல் ஆண்டுதோறும் புத்தகத்திருவிழா நடத்தப்படும். அரசை நம்பியிருக்காமல்  ஆண்டுதோறும் புத்தகத்திருவிழாவை நடத்தும் வகையில் ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டு அந்த அமைப்பே புத்தகத் திருவிழாவை நடத்த வழிவகை செய்யப்படும். தமிழ்மொழியைப் போல சிறந்த மொழி உலகில் வேறு எதுவும் இல்லை என்றார். 
விழாவிற்கு தமிழ்ச்சங்கத் தலைவர் மை.அப்துல்சலாம், துணைத் தலைவர் வைகிங் எம்.எஸ்.கருணாநிதி, மூத்த வழக்குரைஞர் ஆ.ரவிச்சந்திர ராமவன்னி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வழக்குரைஞர் பா.முனியசாமி வரவேற்றார். கே.செந்தில்குமார் "சங்க இலக்கியத் தேன்' என்ற தலைப்பில் பேசினார்.சங்கப் பெண் கவிதைகள் என்ற நூலை அ.அன்வர்ராஜா எம்.பி.வெளியிட அதன் முதல் பிரதியை பேராசிரியை தேன்மொழி.பாலகிருஷ்ணன், சங்க உறுப்பினர்கள் விஜயராணி கருணாநிதி, ஆசிரியை முருகவேணி முனியசாமி, இளங்கோவன் ஆகியோரும் பெற்றுக் கொண்டனர்.விழாவில் பாடகர்கள் வாசு, கருணாகரன், வர்த்தக சங்கத் தலைவர் அஸ்மாபாக் அன்வர்தீன், வேளாண்மை உதவி இயக்குநர் ஷேக் அப்துல்லா, வழக்குரைஞர் அழகு.பாலகிருஷ்ணன், கவிஞர் உரப்புளி.ஜெயராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com