திருவாடானையில் 24 ஆயிரம் ஹெக்டேர் நெற்பயிர் கருகி நாசம்: களை இழந்தது பொங்கல்
By DIN | Published on : 13th January 2018 08:37 AM | அ+அ அ- |
திருவாடானை தாலுகாவில் நேரடி விதைப்பு மூலம் 24 ஆயிரம் ஹெக்டேரில் பயிரிடப்பட்ட நெற் பயிர்கள் மழையின்றி கருகியதால் மாடுகளை மேயவிட்டுள்ளனர். இதனால் இப்பகுதியில் பொங்கல் பண்டிகை களை இழந்து காணப்படுகிறது.
திருவாடானை தாலுகா முழுவதும் சுமார் 24 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் கடந்த சில மாதங்களுக்கு முன் பெய்த மழையை நம்பி இப்பகுதி விவசாயிகள் நேரடி நெல் விதைப்பில் ஈடுபட்டனர். தற்போது பயிர்கள் நன்கு வளர்ந்து உரம் போடும் தருவாயில் பருவ மழை பொய்த்து விட்டதால் பயிர்கள் அனைத்தும் கருகி விட்டன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையும் களை இழந்து காணப்படுகிறது.
இது குறித்த அரும்பூர் விவசாயி அன்பழகன் கூறுகையில், கடந்த இரண்டு வருடங்களாக இப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருகிறது. தொடர் வறட்சி காரணமாக விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். தற்போது நெல் பயிர்கள் கருகி விட்டதால் அதனை கால்நடைகளை விட்டு மேயவிட்டுள்ளனர். இந்த ஆண்டும் அரசு வறட்சி நிவாரணம் கொடுத்து விவசாயிகளை காப்பாற்ற வேண்டும் என்றார்.