மூக்கையூரில் ரூ.113.90 கோடியில் மீன்பிடித் துறைமுகம் அமைக்கும் பணி தீவிரம்: ஆட்சியர்

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகேயுள்ள மூக்கையூரில் ரூ.113.90 கோடி மதிப்பில் மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்பட்டு வருகிறது என ஆட்சியர் எஸ்.நடராஜன் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகேயுள்ள மூக்கையூரில் ரூ.113.90 கோடி மதிப்பில் மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்பட்டு வருகிறது என ஆட்சியர் எஸ்.நடராஜன் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
 ராமநாதபுரம் அருகேயுள்ள பிரப்பன் வலசை கிராமத்தில் உள்ள புயல் நோக்கு பாதுகாப்பு கட்டடத்தில் மீன்வளத்துறையும், இந்திய கடலோரக் காவல்படையும் இணைந்து மீனவ இளைஞர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்பை நடத்தி வருகின்றனர். இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு ஆட்சியர் எஸ்.நடராஜன் பேசியதாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மீனவ இளைஞர்களுக்கு இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோரக் காவல்படை ஆகியவற்றில் நவீக் மற்றும் மாலுமி ஆகிய பணிகளில் சேருவதற்கான உடல் தகுதித் தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வுகளை எதிர்கொள்வது குறித்த சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏற்கெனவே பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் 50 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
 இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்வோர் பயிற்சியை முழுமையாக பயன்படுத்திக் கொண்டு இந்தியக் கடற்படை மற்றும் இந்தியக் கடலோரக் காவல்படை தேர்வுகள் மட்டுமல்லாது எத்தகைய போட்டித் தேர்வுகளானாலும் அதனை எதிர்கொள்வதற்கான தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
 ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.113.90 கோடி மதிப்பில் மூக்கையூரில் மீன்பிடித் துறைமுகம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. ராமேசுவரம் அருகே குந்துகால் கடற்கரையில் ரூ.70 கோடி மதிப்பில் மீன்களைப் பிடித்து வந்த பிறகு அவற்றை இறக்கி வைக்கும் மீன்பிடி இறங்குதளம் அமைக்கும் பணிகளும் நடந்து வருகின்றன என்றார்.
 இந்நிகழ்ச்சியில் இந்திய கடலோரக் காவல்படை கமாண்டர் வெங்கடேசன்,  மீன்வளத்துறை கூடுதல் இயக்குநர் சு.சமீரன், தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக் கழக ஆராய்ச்சி நிலைய இயக்குநர் டி.சுகுமாறன், மீன்வளத் துறை துணை இயக்குநர் ஐசக். ஜெயக்குமார், உதவி இயக்குநர் கோபிநாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com