கமுதி வேளாண் விரிவாக்க மையத்தை திறக்க கோரிக்கை

கமுதியில் கட்டி முடிக்கப்பட்டு 6 மாதங்களாகியும் திறக்கப்படாமல் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தை திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

கமுதியில் கட்டி முடிக்கப்பட்டு 6 மாதங்களாகியும் திறக்கப்படாமல் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தை திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
கமுதி தாலுகாவுக்குள்பட்ட 53 கிராம ஊராட்சிகளில் உள்ள விவசாயிகள் தங்களுக்கு தேவையான நெல், சோளம், குதிரைவாலி, எள் உள்ளிட்ட தானியங்களின் விதைகள் மற்றும் வேளாண்மை சம்பந்தமான பொருள்களை மானிய முறையில்,  வேளாண்மை அலுவலகம் மூலம் பெற்று வருகின்றனர். தற்போது, கமுதியில் உள்ள வேளாண்மை  அலுவலகம் சேதமடைந்து, சிறிய கட்டடத்தில் இயங்கி வருவதால் விவசாயிகள் மற்றும் ஊழியர்கள் இடப்பற்றாக்குறையால் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், விவசாயிகள் மற்றும் வேளாண்மை அலுவலக ஊழியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, கடந்த 2015-16 ஆம் நிதியாண்டில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ. 1 கோடிமதிப்பில் சேமிப்புக் கிடங்குகளுடன் கூடிய  வேளாண்மை விரிவாக்க மையம் கட்டப்பட்டது. இந்தக் கட்டடம்  கட்டி முடிக்கப்பட்டு 6 மாதங்களாகியும் பயன்பாட்டுக்கு வராமல் காட்சிப் பொருளாக உள்ளது.
இதனால், விவசாயிகளுக்கு தமிழக அரசு  மானிய முறையில் வழங்கிவரும் நெல் உள்ளிட்ட விதை பொருள்கள் மற்றும் உரங்கள் மழை, வெயிலில் சேதமடைந்து வருகின்றன. மேலும், விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் தானியங்களை சேமிப்பு கிடங்குகளில் சேமித்து வைக்க முடியாத நிலை உள்ளதாகவும் கவலை தெரிவிக்கின்றனர். இதனால், தனியார் கிடங்குகளில் அதிக வாடகை கொடுத்து தானியங்களை சேமித்து வைக்கும் நிலை உள்ளது.
எனவே,  கட்டி முடிக்கப்பட்டு நீண்ட நாள்களாகியுள்ள வேளாண்மை விரிவாக் மையத்தை உடனடியாக திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.   இது குறித்து கமுதி துணை வேளாண்மை அலுவலர் சேதுராம் கூறுகையில்,
கமுதி வேளாண் விரிவாக்க மையக் கட்டடப் பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், அலுவலக அறைகளில் குளிர்சாதனப் பெட்டிகள் பொருத்தும் பணிகள் நிறைவடையாமல் உள்ளன. அப்பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு திறக்கப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com