ராமேசுவரத்தில் இறால் பண்ணைகளை அகற்றக் கோரி 12 கிராம மக்கள் முற்றுகை போராட்டம்

ராமேசுவரத்தில் நிலத்தடி நீருக்கு பாதிப்பு ஏற்படுத்தும் இறால் பண்ணைகளை அகற்ற வலியுறுத்தி, 12 கிராம மக்கள் புதன்கிழமை வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

ராமேசுவரத்தில் நிலத்தடி நீருக்கு பாதிப்பு ஏற்படுத்தும் இறால் பண்ணைகளை அகற்ற வலியுறுத்தி, 12 கிராம மக்கள் புதன்கிழமை வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
 ராமேசுவரத்தில் 60 சதவீத குடிநீர் தேவையை அரியாங்குண்டு, பேக்கரும்பு, வடகாடு உள்ளிட்ட 12 கிராமங்களில் உள்ள கிணற்று நீர் மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது. இந்நிலையில், இந்த 12 கிராமங்களிலும் செயல்படும் இறால் பண்ணைகளால் நிலத்தடி நீர் மாசடைந்து, உவர்ப்புத் தன்மை ஏற்பட்டுள்ளது.
 இதனால், இறால் பண்ணைகளை அகற்ற கோரி மேற்கண்ட கிராம மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக ஏற்கெனவே நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, இறால் பண்ணைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய் கோட்டாட்சியர் உறுதி அளித்திருந்தார். ஆனால் அதன்படி எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
  இந்நிலையில், தமிழ்நாடு மீன்பிடிதொழிற்சங்க கூட்டமைப்பு மாவட்ட துணைத்தலைவர் இ.ஜஸ்டீன் தலைமையில் 12 கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், புதன்கிழமை போராட்டம் நடத்தினர்.
 அவர்கள், டவுன் காவல் நிலையத்தில் இருந்து பேரணியாக புறப்பட்டு பேருந்து நிலையம் முன், காதில் பூ சுற்றியும், சங்கு ஊதியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  
 இப்போராட்டத்தில் கிராம தலைவர்கள் சுப்பிரமணியன், கர்ணன், கணேசன், அருள்தாஸ், சேதுராஜன் மற்றும் குமரன், மீன்பிடி தொழிற்சங்க மாவட்ட செயலாளர் கருணாமூர்த்தி, சிஐடியு மாவட்ட செயலாளர் எம்.சிவாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாலை வரை அதிகாரிகள் யாரும் பேச்சுவார்த்தைக்கு வராததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டன. 
 இதைத்தொடர்ந்து, டவுன் காவல் ஆய்வாளர் குமார், உதவி ஆய்வாளர் லோகநாதன் தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனையடுத்து, வருவாய் கோட்டாட்சியர் சுமன் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இருப்பினும் உடன்பாடு ஏற்படாததால் கிராம மக்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com